Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்த  தயாராகும் ஹமாஸின்  திடீர் அறிவிப்பு!

போர் நிறுத்த  தயாராகும் ஹமாஸின்  திடீர் அறிவிப்பு!

31 வைகாசி 2024 வெள்ளி 15:28 | பார்வைகள் : 2195


காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளமை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.

அதாவது காஸாவில் உள்ள மக்களுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் இஸ்ரேல் நிறுத்தினால், முழுமையான உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்குச் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே மற்றொரு பக்கம் எங்கள் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலின் இந்த பாலிசியை ஹமாஸ் மற்றும் பலஸ்தீனிய அமைப்புகள் ஏற்க மாட்டோம். 

காஸாவில் உள்ள எங்கள் மக்களுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் இஸ்ரேல் நிறுத்தினால் முழுமையான உடன்பாட்டை எட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

பணய கைதிகளை விடுவிப்பது தொடங்கி விரிவான ஒப்பந்தத்திற்கு நாங்கள் தாயாக உள்ளோம்.

எங்களது இந்த நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம் என்றார்.

எனினும் ஹமாஸ் விடுத்த போர் நிறுத்த அறிவிப்புக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல மாதங்களாகப் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போரைத் தொடங்கியுள்ளது.

இந்த போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது.

அதேவேளை ரஃபா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அதை இஸ்ரேல் ஏற்பதாகத் தெரியவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை ரஃபாவின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்தது. தெற்கு காஸாவில் அமைந்துள்ள முக்கிய நகரம் தான் ரஃபா. பெரும்பாலான பலஸ்தீனர்கள் வாழும் இந்த பகுதியில் பல அகதிகள் முகாம்களும் இருக்கிறது.

இதன் காரணமாகவே அமெரிக்கா தொடங்கிப் பல உலக நாடுகள் இந்த நகரின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலைக் கடுமையாக எச்சரித்தன. 

எனினும் உலக நாடுகளின் எச்சரிக்கையினை மீறி கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ரஃபாவில் 35க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், பலர் காயமடைந்தனர். ரஃபா தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. பல்வேறு நாடுகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், All Eyes on Rafah என்ற தொடர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் பலஸ்தீனத்தை தனி நாடாகவும் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்