Paristamil Navigation Paristamil advert login

சூரி ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டினாரா?

சூரி ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டினாரா?

1 ஆனி 2024 சனி 06:52 | பார்வைகள் : 1490


நட்பு, துரோகம், விஸ்வாசம், அரசியல், பகை என தமிழ் சினிமாவில் பல முறை சொல்லப்பட்ட ஒரு கதைதான். இருவரது நட்புக்குள் ஒரு அரசியல் புகுந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.

ஒரு படத்தில் கதையும், அதில் நடித்தவர்களின் நடிப்பும் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்தாலே அந்தப் படத்தை ரசித்துவிட முடியும். இந்தப் படத்தில் திருப்பம் நிறைந்த கதையும், நடித்துள்ளவர்களின் நடிப்பும் தான் இந்தக் கருடனைப் பறக்க வைத்துள்ளது.

தேனி அருகே கோம்பை என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் இருக்கிறது. ஆனால், அது பற்றி ஊர் மக்களுக்குத் தெரியாது. அந்த கோயில் நிலத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் ஆர்வி உதயகுமார். அந்த கோவிலின் லாக்கரில் உள்ள பட்டயத்தை எடுக்க முயற்சிக்கிறார் அமைச்சர். ஆனால், அந்த கோவிலின் டிரஸ்ட்டிகளான நண்பர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரை மீறி அதை எடுப்பது சிரமமாக இருக்கிறது. அதனால், அந்த நண்பர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறார். அதனால், சில மோதல்கள், இழப்புகள் உருவாகிறது. அவற்றை உன்னி முகுந்தனின் விஸ்வாசியான சூரி எப்படி முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

'விடுதலை' படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக சூரி நடித்துள்ள படம். ஊரில் செங்கல் சூளை நடத்தி வரும் உன்னி முகுந்தன் சிறு வயதிலேயே சூரியை அழைத்து வந்து அவருடைய வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார். அதனால், உன்னிக்கு உன்னதமான விஸ்வாசியாக இருக்கிறார் சூரி. எந்த உண்மையையும் மறைக்கத் தெரியாத சூரி சில காட்சிகளில் முக்கிய உண்மைகளை வேகமாக உளறிக் கொட்டிப் பேசும் போது கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் காமெடி நடிகராக இருந்த சூரியா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். “நாயாக இருந்த என்னை மனுஷனா ஆக்கிட்டீங்களே,” என கிளைமாக்ஸ் வசனம் பேசும் போது அப்படி ஒரு சிறந்த நடிகர் எட்டிப் பார்க்கிறார். சூரிக்கு ஒரு புதிய பாதை கிடைத்துள்ளது, அதை விடாமல் பயணித்தால் சில மொக்கை காமெடி ஹீரோக்களை ஓரம் கட்டிவிடலாம்.

கிராமத்துக் கதாபாத்திரம், நண்பனுக்காக உருகும் கதாபாத்திரம் என்றால் அனைவரின் நினைவுக்கும் உடனே வருவது சசிக்குமார் தான். அவரைவிட்டால் இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் இயல்பாக நடிக்க இப்போதைக்கு யாருமில்லை. ஆதி கதாபாத்திரத்தில் வழக்கம் போல அசத்தியுள்ளார். நட்பின் துரோகத்தால் அவருக்குக் கிடைக்கும் முடிவு அதிர்ச்சிகரமானது.

வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் உன்னி முகுந்தன். ஜமீன் பரம்பரையாக இருந்தாலும் செங்கல் சூளை நடத்திக் கொண்டு வசதியான வாழ்க்கைக்குத் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். அதனால், அமைச்சர் வந்து சில கோடி பங்கு தருகிறேன் என்று சொன்னதும் அப்படியே மாறிவிடுகிறார். 'நண்பனாக இருந்தாலும் நம்பாதே' என சொல்ல வைக்கிறது இவரது கதாபாத்திரம். மலையாள வாடை உச்சரிப்பை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

சூரியன் காதலியாக ரேவதி ஷர்மா. கிராமத்து இளம் பெண்ணாக வந்து கவர்கிறார். மற்ற பெண் கதாபாத்திரங்களை விட இவருக்குத்தான் சில காட்சிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. சசிக்குமார் ஜோடியாக ஷிவதா, அழுது புரளும் அந்த ஒரு காட்சி போதும் இவருக்கு. உன்னி ஜோடியாக ரோஷினி ஹரிப்ரியன், கணவரை உசுப்பேற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி, அமைச்சராக ஆர்வி உதயகுமார், தியேட்டர்காரராக மைம் கோபி, உன்னியின் பாட்டியாக வடிவுக்கரசி, உன்னியின் மச்சானாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், இவரது மனைவியாக பிரிகிடா என மற்ற கதாபாத்திர நடிகர்களுக்கும் சில முக்கியமான காட்சிகள் படத்தில் உண்டு.

படத்தில் சூரியின் ஆக்ஷன் காட்சிகளைக் கூட நம்ப வைக்கும் அளவிற்கு அதற்கு தன் இசையால் மிரட்டலை சேர்த்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. குறிப்பாக இடைவேளைக் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சிகளும் வேறு ஒரு தளத்தில் அமைந்துள்ளன. ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு கதைக்கேற்ற வண்ணத்தை தனித்துவமாய் அளித்துள்ளது. சண்டைக் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.

படத்தில் சூரி மீதோ, சசிக்குமார் மீதோ நமக்கு ஒரு அனுதாபம் ஏற்படும் அளவில் காட்சிகள் அழுத்தமாக அமையவில்லை. சசிக்குமார் மீது அது வந்திருக்க வேண்டும். ஆனால், திரைக்கதை யுத்தியில் அதை பின்னர் கொண்டு வருவதால் அதுவும் நடக்காமல் போய்விட்டது. அதே போல உன்னியின் கதாபாத்திரம் பற்றியும் கடைசியில் மட்டுமே வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். சஸ்பென்ஸை காப்பாற்ற இப்படி செய்திருந்தாலும், அது கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்திவிட்டது. கொலைகளை இத்தனை கொடூரமாய் காட்டியிருக்க வேண்டியதில்லை. ஒரு வழக்கமான பழி வாங்கும் படமாக மட்டுமே பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்