கிங் கப் ஆப் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் அல் ஹிலால் வெற்றி
1 ஆனி 2024 சனி 09:24 | பார்வைகள் : 1432
அல் நஸர் அணிக்கு எதிரான கிங் கப் ஆப் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் அல் ஹிலால் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஹிலால் அணிகள் மோதின.
பரபரப்பாக ஆரம்பித்த இந்த இறுதிப் போட்டியில், அலெக்ஸாண்டர் மில்ட்ரோவிக் 7வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அல் நஸர் வீரர்கள் கோல் அடிக்க போராடினர். 46வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த Bycycle kick, கோல் கம்பத்தில் பட்டு வெளியே வந்தது.
56வது நிமிடத்தில் அல் நஸர் வீரர் டேவிட் ஓஸ்பினா சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். பின்னர் அல் நஸரின் அய்மன் யஹ்யா 88வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார்.
ஆனால் மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. வெற்றி பெறும் அணியை தீர்மானிக்க பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
அதில் அல் ஹிலால் அணி 5-4 என்ற கணக்கில் அல் நஸர் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ரொனால்டோ மற்றும் அல் நஸர் அணி ரசிகர்கள் தோல்வியால் சோகத்தில் மூழ்கினர்.