இலங்கையில் திடீரென புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல் - 7 பேர் காயம்
1 ஆனி 2024 சனி 12:06 | பார்வைகள் : 10314
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சில பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் வீடொன்றில் இருந்த பொருட்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள்களும் சேதத்திற்குள்ளாகியது.
வாள்கள் தாங்கிய சிறு குழுவொன்றின் தாக்குதல் காரணமாகவே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாச்சிக்குடா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதுடன் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
வாள்கள் தாங்கிய சிறு குழுவானது ஒருவரை விரட்டி வந்த நிலையில் விரட்டப்பட்டு வந்தவர் அவரது சகோதரி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இதன் காரணமாக அவ்வீட்டினுள் நுழைந்து வாள் தாங்கிய குழுவானது அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்போது அவ்வீட்டில் இருந்தவர்கள் வாள் வெட்டிற்கு இலக்கானதுடன் சத்தம் கேட்டு வீட்டினுள் நுழைந்த அயல் வீட்டார் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதுடன் வீதியில் இருந்த மோட்டார் சைக்கிளும் தாக்கப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதலால் செய்வதறியாது நிலை தடுமாறிய பொதுமக்கள் சிலர் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளித்தும் உள்ளனர். சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இச்சம்பவத்தினால் அப்பிரதேசமே அதிர்ச்சியில் உறைந்து போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
இதன் பின்னராக அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிசார் நிலமையினை பார்வையிட்டு சென்றுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan