Paristamil Navigation Paristamil advert login

அரசியல் தீர்வு இல்லாத நல்லிணக்கம் நம்பிக்கை தராது

அரசியல் தீர்வு இல்லாத நல்லிணக்கம் நம்பிக்கை தராது

1 ஆனி 2024 சனி 13:25 | பார்வைகள் : 309


போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை என்பதை போர் முடிவின் பதினைந்தாவது வருட நிறைவு தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இராணுவ நடவடிக்கையின் களமாக இருந்த வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வழமைநிலை உணர்வு இருக்கிறது. போரின் நினைவு அருகிக்கொண்டு போகிறது. இந்த நிலைவரம் அரசாங்கம் மற்றைய பிரச்சினைகளுக்கு மிகவும் குறிப்பாக அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் இன்னமும் தொடர்ந்து அவலத்தை ஏற்படுத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் அதுவும் அவருக்கு  பலம்பொருந்திய மேற்குலக நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகள் இருக்கும் சூழ்நிலையில் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமிருந்து வருகின்ற சர்வதேச நெருக்குதல்களை வெற்றிகொள்ளமுடியும் என்ற நம்பிக்கையும் கூட இருந்தது.

ஆனால், இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகள் சர்வதேச சமூகம்  இலங்கை மீது அதன் கவனத்தை தொடர்ந்து செலுத்துகிறது என்பதை  வெளிக்காட்டுகிறது. அமெரிக்க வல்லரசுடன் சேர்ந்து வர்த்தக கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்கு செங்கடலுக்கு கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பியதைப் போன்ற (அரசாங்கம் பயன்படுத்திய) புவிசார் அரசியல் தந்திரோபாயங்கள்  சர்வதேச மனித உரிமைகள் மன்றங்களில் பயனைத் தரவில்லை. அரசாங்கத்தின் நோக்கில் இருந்து பார்க்கும்போது நிலைவரம் உண்மையில்  மேலும் மோசமாகியிருக்கிறது போன்றே தெரிகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ் கலாமார்ட்டின்  இலங்கை விஜயமும் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவரின் பங்கேற்பும்  முக்கியமாக கவனிக்கத்தக்கது. இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவதன் மூலம்  தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு விடுக்கப்பட்ட அந்த அழைப்பு காசாவிலும் உக்ரேனிலும் மேற்கு நாடுகள் இழந்துவிட்ட தார்மீக நியாயப்பாட்டை தக்கவைப்பதற்கான  ஆர்வத்தின் ஒரு அறிகுறியாகும். காசாவிலும் உக்ரேனிலும் மோதல்கள் தொடருகின்ற போதிலும் இலங்கை மீது கவனத்தைச் செலுத்துவதில் ஒரு தளர்வு இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணமாகும். இலங்கை மீதான கவனம் மேலும் தீவிரமடைந்திருக்கிறது போன்றே தோன்றுகிறது.

தமிழ் ஈழம் மீது  சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையையும்  இலங்கையில் இடம்பெற்றது. இனப்படுகொலை என்று கனடிய பிரதமர் வருடாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையையும் வெறுமனே வெளிநாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கும் தந்திரச்செயல்கள் என்று நிராகரித்துவிடமுடியாது.  இந்த அறிக்கைகளும் நிலைப்பாடுகளும் சர்வதேச மன்னிப்பச் சபையின் அறிக்கையில் காணப்பட்டதைப் போன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரிதாகிவிடக்கூடும்.

இரு முனைகள்

இந்த சர்வதேச சவாலுக்கு அரசாங்கம்  இரு முனை அணுகுமுறை ஒன்றின் ஊடாக பதிலளிக்கின்றது போன்று தெரிகிறது. சர்வதேச விமர்சகர்களினால் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளை  கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன்  கூடிய பதில்கள் மூலம் மறுதலிப்பது ஒரு அணுகுமுறை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறைபாடுகளைக் கொண்டது என்றும் பக்கச்சார்பின்மை, சொந்த உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பீட்டு தொடர்பிலான அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும்   ஜெனீவாவில் உள்ள அதன் தூதுவரூடாக அரசாங்கம் கூறியிருக்கிறது. அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற ஒரு நேரத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று இலங்கையின் தூதுவர் கூறியிருக்கிறார்.

கனடாவின் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பொருத்தமில்லாத வகையில் இலங்கை மீது  கனடா செலுத்தும் கவனம் அதன் இரட்டைத் தன்மைக்கு ஒரு தெளிவான உதாரணம் என்றும் உலகின் வேறு பகுதிகளில்  தினமும் நிகழும் மனித அவலங்கள்  தொடர்பில் வேண்டுமென்றே கனடா  கவனத்தைச் செலுத்தாமல் இருக்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிடடிருக்கிறார்.

இரண்டாவது அணுகுமுறை ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கில் உள்ள அரச நிருவாகத்துடனும் சிவில் புத்திஜீவிகளுடனும் தொடர்புகொண்டு செயற்படுவதற்காக அந்த பகுதிக்கு ஜனாதிபதி பல தடவைகள் விஜயம் செய்திருக்கிறார். அண்மைய வெசாக் விடுமுறையின்போது  யாழ்ப்பாணத்தில் இரு தினங்களைச் செலவிட்ட அவர் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்துப் பேசினார்.  பெரியளவினான அபிவிருத்தி நடவடிக்கைகளின் மையமாக வடக்கை மாற்றுவதற்கான அபிவிருத்தி நோக்கு  ஒன்றையும் ஜனாதிபதி எடுத்துக்கூறினார்.

 "வடக்கிலும் கிழக்கிலும் மோதலின் விளைவாக தோன்றிய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காணவேண்டிய அவசியத்தை அங்கீகரித்து பிரதமராக இருந்த வேளையிலும் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற வேளையிலும் யாழ்ப்பாணத்துக்கு கிரமமாக விஜயம் செய்வதில் நான் முக்கிய கவனம் எடுத்தேன். அபிவிருத்தியை நோக்கி எமது கவனத்தைத் திருப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இங்குள்ள மக்கள் தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருக்கிறார்கள். அபிவிருத்திக்கான ஆற்றலும் வளமும் யாழ்ப்பாணத்தில் பெருமளவில் இருக்கின்றன. அண்மைய வருடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியையே கண்டிருக்கும் யாழ்ப்பாணம் வளர்ச்சிக்கான பேரளவு ஆற்றல்களைக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.

நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவை பற்றியும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி பேசினார்."  முன்னோக்கிச் செல்வதற்கு நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது. காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவேண்டியிருக்கிறது.  இழப்பீடு, உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறையொன்றை வகுக்கவேண்டியிருக்கிறது. இந்த சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் கூட்டு ஒத்துழைப்பும் செயற்பாடும் அவசியமாகிறது.

"முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடியிருக்கிறேன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. ஆனால் நீதி அதிகாரங்கள் குறித்த முக்கியமான பிரச்சினையை நாம் கையாளவேண்டும்" என்று ஜனாதிபதி கூறினார்.

அதிகாரப்பகிர்வு

ஆனால், இத்தகைய முயற்சிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதியின் முயற்சிகள் வடக்கு மக்களைச் சென்றடைவதில் இடைவெளி ஒன்று இருக்கிறது. இது முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். தற்போது செயலிழந்து கிடக்கும் மாகாணசபைகளின் வடிவில் உள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதி கையாளவில்லை என்று வடக்கில் உள்ள ஊடகங்களும் புத்திஜீவிகளும் கூறுகிறார்கள்.

இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டுமானால் அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் கடந்த கால உரிமை மீறல்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளையும் மாத்திரமல்ல அதிகாரப் பரவலாக்கத்திலும் கவனம் செலுத்தவேண்டியது முக்கியமானதாகும். பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழுகின்ற பன்முக நாடான இலங்கையில் இனத்துவ சமூகங்களுக்கு இடையில் ஒப்புரவான முறையில் அதிகாரங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதிலேயே இனநெருக்கடியின  மூலவேர்கள் இருக்கின்றன என்பதை   கூர்மதியுடைய ஒரு அரசியல் மாணவன் என்ற வகையில் ஜனாதிபதி நன்றாக அறிவார்.

இரு வருடங்களுக்கு  முன்னர் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவானபோது இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி துணிச்சலாகப் பேசினார். அரசியலமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை குறித்து மாத்திரமல்ல இதுவரையில் வேறு எந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்தாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும் ஏற்பாடுகள் உட்பட அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார்.

ஆனால் இப்போது இ்ன்னும் ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போடாடிடுவது  குறித்து சிந்திக்கும் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாக்குகளைப் பெறுவதற்கு தான் தங்கியிருக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவு தொடர்பில் குறைந்தளவு நம்பிக்கையைக் கொண்டவராகவே அவர் இருக்கிறார். ஆனால் அதிகாரப்பகிர்வு தொடர்பில் மௌனமாக இருந்தால் தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கும் வடக்கிலும் கிழக்கிலும் அவருக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் ஆபத்துக் குள்ளாகக்கூடும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவும் பிரதான போட்டியாளர்களாக விளங்கப்போகும் இருவரில் ஒருவரான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது தலைமையிலான எதிர்கால அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என்று நேரடியாகவே கூறியிருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் மேதினப் பேரணியில் உரையாற்றிய பிரேமதாச , " வங்குரோத்து அடைந்த எமது நாட்டை பீடித்திருக்கும் பாரதூரமான அரசியல் பிரச்சினைகளுக்கு குறிப்பாக சிங்களவர்கள் அல்லாத சமூகங்களின் பிரச்சானைகளுக்கு நிலைபேறான தீர்வைக் காண்பதற்கு பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் ஆதரவை நாம் நாடவிருக்கிறோம்" என்று கூறினார்.

இதில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குகிறது. நாடு உண்மையாகவே நிலைபேறான நல்லிணக்கத்தைக் காணவேண்டும் என்றால் அபிவிருத்தியையும் கடந்த காலத்தையும் கையாளுவதுடன் சேர்த்து அந்த திருத்தத்தை நடைமுறைப்டுத்துவதும் அவசியம் என்றும் பிரேமதாச கூறினார்.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்