Paristamil Navigation Paristamil advert login

கதிகலங்க வைக்கும் காலநிலை மாற்றம்

கதிகலங்க வைக்கும் காலநிலை மாற்றம்

24 ஆவணி 2023 வியாழன் 10:07 | பார்வைகள் : 3611


“இலங்கையில் வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களில் அதிகரித்த வெப்பம் நீடிக்கின்ற நிலையில், வறட்சி காரணமாக 15 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையால் 54ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன”

“தற்போதைய நிலையில், ‘சூழலும் பூமி கொதித்துக்கொண்டிருக்கும் காலம்’ ஆகவே காலநிலை தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை” என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.


உலகளவில் வெப்பநிலை என்றுமில்லாதவாறு உச்சத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன், “காற்றை சுவாசிக்க முடியவில்லை, வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை, காபன் எரிபெருள் மூலம் எட்டப்படும் இலாபத்தையும் பருவநிலை தொடர்பாக எதுவும் செய்யாமல் இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காலநிலை மாற்றத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே” என்ற  தமது எதிர்கால அச்சம் கலந்த எச்சரிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு நிறுவனமான கோபர்நிகஸின் பிரதிப் பணிப்பாளர் சமந்தா பர்கெஸ் ஜெனிவாவில் ஊடகவியலாளார்களைச் சந்தித்தபோதும் அதிகரிக்கும் வெப்பநிலை பற்றி சுட்டிக் கூறியிருக்கிறார்.

அவர், “இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகின் உயர்ந்த வெப்பநிலை பதிவான மாதமாகியுள்ளது. உலகின் சராசரி வெப்பநிலை 17.00 பாகை செல்சியஸை கடந்துள்ளது. இந்த உயர்வு இதுவரை இல்லாத அளவாகும். புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டுடன் இந்த அதீத வெப்பநிலைக்கு தொடர்பு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, “1991-2020 காலப்பகுதியில் பூமியின் வெப்பநிலையானது சராசரியை விட 0.51டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமையானது 1.5டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இதனால், மனித குலத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் வெகுவான பாதிப்புக்கள் ஏற்படலாம்” என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இந்நிலையில் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ் “ஜூலையில் பலகோடி மக்களைப் பாதித்த தீவிர வானிலை என்பது காலநிலை மாற்றத்தின் அப்பட்டமான உண்மை மட்டுமல்ல எதிர்காலம் குறித்த முன்னறிவிப்பாகவும் உள்ளது. பசுமை இல்ல வாயு உமிழ்வை முன்னெப்போதும் இல்லாததை விட அவசரமாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. காலநிலை தொடர்பான நடவடிக்கை என்பது ஆடம்பரமானது அல்லது, அதுவொரு கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித வரலாற்றில் பதிவான மிகவும் சூடானதும் அதிகமானதுமான வெப்பநிலை ஜுலை 3ஆம் திகதி முதல் நீடித்து வருவதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதோடு சராசரி உலக வெப்பநிலை (பூமியின் முழு மேற்பரப்பில் சராசரியாக காணப்பட்ட வெப்பநிலை) இதுகால வரையில் காணப்பட்ட அதிகபட்சமான வெப்பத்தை விடவும் அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதனடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 பாகை செல்சியஸாக பதிவாகியிருந்தது. இதுவே உலகின் மிக அதிக வெப்பநிலையாக பதிவாகியந்தது. அதை விஞ்சும் வகையில் ஜூலை 3ஆம் திகதி 17.01 பாகை செல்சியஸாக சராசரி வெப்பநிலை பதிவானது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 4ஆம் திகதி 17.18 பாகை செல்சியஸ{ம் ஜூலை 6ஆம் திகதி 17.23 பாகை செல்சியஸ{மாக வெப்பநிலை பதிவானது. இவ்வாறு ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை அதியுச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலைமையானது 1.20இலட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதை உலக வானிலை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளதோடு 2023 அல்லது 2024 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, கிரீஸ், சீனா, ஜப்பான், இத்தாலி, போன்ற தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையில் சிக்கித்தவித்து வருவதோடு இத்தாலியின் 16 நகரங்களில் கடும் வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாடுகளில் காட்டுத்தீயின் பாரவலும் வெகுவாக உள்ளதோடு கஜகஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளில் இயற்கை வளம் குன்றி வறுமை அதிகரித்துள்ளதோடு, ஆபிரிக்க நாடுகளிலும் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைவதால் உணவுப்பற்றாக்குறை நிலைமைகள் தலைதூக்கி வருவதால் அவசர நிலைமைகள் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றன.

தெற்காசியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தை தொட்ட வெப்ப அலையானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் அயல்நாடான இந்தியாவில் 13பேரை காவுகொண்டும் உள்ளது. அதேநேரம், குறித்த வெப்பத்தின் தாக்கம் இலங்கையிலும் அண்மைய நாட்களில் கணிசமாக ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என்று காலநிலை அவதானிப்பு  நிலையம் அறிவித்துள்ளது.

இதுவரையிலான காலத்தில் வவுனியா மாவட்டத்தில் அதியுச்சமான அளவாக 37.7பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதோடு, 12மாவட்டங்களில் கடுமையான வெப்பநிலை காணப்படுவதாகவும் காலநிலை அவதானிப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான நீரேந்துப் பகுதிகளில் 33 சதவீதமான நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும் அதேபோல மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான நீரேந்தப் பகுதிகளில் 35சதவீதமான நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, உடவளவ நீர்த்தேக்கத்திலேயே மிகக்குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ள மகாவலி அதிகார சபை நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவில் 0.45சதவீதமாக காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மகாவலி வளவ பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மிக மோசமான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உடவலவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போவதால் நெருக்கடிகள் தீவிரடையலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இதுவரை 54 ஆயிரத்து 979குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 38பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் குடிநீருக்காக 2 மில்லியனுக்கும் அதிகளவான தொகையினை அரசாங்கம் செலவிட்டுள்ளது. குறித்த 15 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்,

இதேவேளை, உலக வெப்பநிலை அதிகரிப்பால் இலங்கையின் வெப்பநிலை அதிகரிப்பது பொதுப்படையான நிகழ்வாக இருக்கின்றபோதும், தீவு நாடாக இருப்பதால் ஒட்டுமொத்தமான நாடும் நெருக்கடிக்கு உள்ளாகும் அவலமான நிலைமை சற்றே குறைவாக உள்ளது.

இருப்பினும், அண்மைய தசாப்பத்தில் இலங்கையின் சராசரி வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுத்தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, 1.8பாகை செல்சியஸால் குறித்த சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வுத்தகவல்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டும் வெப்பத்தின் தாக்கத்தினை இலங்;கை தவிர்க்க முடியாத நிலைமையே ஏற்படுகின்றது.

உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தாலாஸ், “காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகளின் அனைத்து தணிப்பு முயற்சிகளையும் தாண்டி, உலகில் கடுமையான வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற வெப்ப அலைகள் ஏற்படுவது வருங்காலத்தில் மிகவும் சாதாரண விடயமாக மாறிவிடும்.

இதன் வலுவான உச்சநிலையை விரைவில் நாம் காண்போம். உலகில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த வெப்ப உமிழ்வுகள் அதிகரிப்பதை நாம் தடுக்காவிட்டால் 2026இல் இதன் உச்சத்தை காண்போம். குறிப்பாக ஆசியா நாடுகளில்தான் இந்த வெப்ப உமிழ்வு அதிகமாக இருக்கிறது" என்று கூறியிருக்கின்றார்.

அவருடைய எதிர்வுகூறல் கூற்று இலங்கைக்கும் பொருத்தமானதாக இருக்கையில் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது தான் தற்போதுள்ள பெருங்கேள்வியாகின்றது.

நன்றி வீரகேசரி
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்