ரெட் கார்ட் விவகாரம்...மனம் திறந்த நடிகர் சிம்பு!
2 ஆனி 2024 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 2300
’வெந்து தணிந்தது காடு’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்த படம் ‘கொரோனா குமார்’. இதில் நடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் சிம்பு பிஸியாக இருக்கிறார் எனவும், இந்தப் படத்தை எங்களுக்கு அவர் நடித்துக் கொடுக்க வேண்டும் எனவும் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார்.
இதனால், சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா என்ற விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சிம்பு மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஷங்கர்- கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நேற்று மாலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிம்பு. அதில் அவரிடம் அடுத்தடுத்தப் படங்கள் குறித்தும் ரெட் கார்ட் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. ’தக் லைஃப்’ படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, ‘எஸ்.டி.ஆர்.48’ படமும் தொடங்கும். இரண்டுமே பான் இந்தியா படங்கள்தான். உண்மையை வெளிப்படையாக பேசுவதால் பலர் பல பிரச்சினைகளைச் சந்தித்து இருக்கிறார்கள்.
நானும் அதில் ஒருவன். எனக்கு ரெட் கார்ட் என்ற விஷயம் பேசு பொருளாகி இருக்கிறது. அதெல்லாம் வதந்திதான். எங்களுக்குள் சிறு சிறு பிரச்சினை இருந்தது. அதெல்லாம் பேசி முடித்து விட்டோம். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். ஷூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். ‘இந்தியன்2’ படம் வெற்றி பெற வாழ்த்துகள்!” என்றார்.