Paristamil Navigation Paristamil advert login

நிலவில் சீன விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது

நிலவில் சீன விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது

2 ஆனி 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 327


நிலவில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விண்கலங்களை அனுப்பி வருகின்றன. நிலவில் மண்,பாறை மாதிரிகளை கொண்டு வர சீனா, சாங்-இ விண்கல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே 3-ந்தேதி சாங்-இ 6 விண்கலத்தை லாங் மார்ச்-5 ராக்கெட்டில் நிலவுக்கு அனுப்பியது.

இந்த நிலையில் சாங்-இ 6 விண்கலம் இன்று காலை நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. 

அந்த விண்கலம் நிலவின் தொலைதூர பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்தது. இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் பாதி பகுதியான தென் துருவ எய்ட்கன் படுகையில் உள்ள ஒரு பள்ளத்தில் விண்கலம் தரையிறங்கி உள்ளது.

விண்கலம் தரையிறங்கிய 48 மணி நேரத்திற்குள் துளையிடத் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க ஒரு ரோபோ பணியை தொடங்கும். சாங்-இ 6 விண்கலம் மூலம் சேகரிக்கப்படும் மண்,பாறை மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும்.

சாங்-இ 6 விண்கலம் தரையிறங்கியுள்ள அப்பல்லோ பேசின் என அழைக்கப்படும் பள்ளத் தாக்கு பகுதி நீர் பனியைக் கொண்டிருக்கலாம். 

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நிலவின் இரு பக்கங்களின் சிறப்பியல்புகள் மற்றும் வேறுபாடுகளை ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும், நிலவின் ரகசியங்களை வெளிப்படுத்துவதற்கும் நிலவின் தொலைதூரப் பகுதியில் இருந்து நேரடி மாதிரிகள் எடுப்பது அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிலவின் தொலைதூரப் பயணங்கள் மிகவும் கடினமானவை. இது தகவல் தொடர்புக்கு மிகவும் கடினமான பகுதியாகும். , நிலவில் அரிதாக ஆராயப் பட்ட பகுதியிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே அனுப்பப்பட்ட சாங்-இ -5 விண்கலம் நிலவில் இருந்து எரிமலைப் பாறை மாதிரிகளை கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்