ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்திய வடகொரியா
3 ஆனி 2024 திங்கள் 14:59 | பார்வைகள் : 1875
தென்கொரியாவிற்கு பெரிய பலூன்களின் மூலம் குப்பைகளை வடகொரியா அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தென்கொரியாவுக்கு ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் என வடகொரியா தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ராட்சத பலூன்கள் முழுக்க குப்பைகளை கட்டி அவற்றை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்தது.
இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்கொரிய பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ பகுதிகள், சாணம், சிகரெட் துண்டுகள் இடம்பெற்று இருந்தன. வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம்தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது.
இந்த நிலையில், வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
"எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," தெரிவித்தார்.
அதோடு தென் கொரியா சார்பில் நீண்ட காலமாக பலூன்கள் அனுப்பப்பட்டு வருவதற்காகவே இவ்வாறு பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.