எதிர்கால பாலஸ்தீன அரசு ஒன்று சாத்தியமா?
4 ஆனி 2024 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 1026
இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் 2023 அக்டோபர் 7 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவருகின்ற போரும் பாலஸ்தீனப் பிரச்சினையை மேற்காசியாவில் மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. போர் காசாவின் பெரும் பகுதியை நிர்மூலம் செய்ததுடன் அதன் மக்களில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்றொழித்திருக்கும் நிலையில்,எதிர்காலப் பாலஸ்தீன அரசு ஒன்றுக்கான உறுதியான ஆதரவுக்குரலை கூடுதலான நாடுகள் கொடுப்பதை உலகம் காண்கிறது.
அண்மையில் மூன்று ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின்,நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரித்திருக்கினறன. பாலஸ்தீனப் பிரச்சினை தீர்த்துவைக்கப்படாவிட்டால் பிராந்தியத்தில் நிலையான அமைதி ஒருபோதும் ஏற்படப்போவதில்லை என்று சவூதி அரேபியா,ஜோர்தான் உட்பட அரபு நாடுகள் கூறுகின்றன. நெருக்கடிக்கு சர்வதேச அங்கீகாரத்துடனான ஒரு தீர்வு என்றால் அது இரு அரசு தீர்வேயாகும்.
இரு அரசு தீர்வு என்றால் என்ன?
இந்த கேள்விக்கு சுருக்கமான பதில் சுலபமானது. வரலாற்று ரீதியான பாலஸதீனத்தை அதாவது கிழக்கே ஜோர்தான் ஆற்றுக்கும் மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் இடையிலான நிலத்தை ஒரு அரபு அரசாகவும் ஒரு யூத அரசாகவும் பிரிப்பதே அந்த இரு அரசு தீர்வாகும். ஆனால் நீண்ட பதில் சிக்கலானதாகும்.
இஸ்ரேல் என்ற யூத அரசு 1948 ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீன அரசு இன்னமும் ஒரு யதார்த்தமாகவில்லை. 1967 ஆம் ஆண்டு முதல் பாலஸதீனப் பிராந்தியங்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழேயே இருந்துவருகின்றன. அதனால், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் வேறு எந்தவொரு தேசத்தையும் போன்று முழுமையான உரிமைகளை அனுபவிக்கின்ற சட்ட ரீதியான நியாயப்பாடும் இறைமையும் கொண்ட ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்குவதே இன்றைய நிலையில் இரு அரசு தீர்வு என்பதன் அர்த்தமாகும்.
தோற்றுவாய்கள் எவை?
இரு அரசு தீர்வின் தோற்றுவாயை 1930 களில் பின்னோக்கியே தேடவேண்டும். அப்போது பாலஸ்தீனத்தை பிரிட்டிஷார் ஆட்சி செய்தார்கள். பாலஸ்தீனத்தில் அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான மோதல்களுக்கான காரணங்களை ஆராய்வதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம 1936 ஆம் ஆண்டில் வில்லியம் றொபேர்ட் பீல் பிரபு தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அது பீல் ஆணைக்குழு என்றே பிரபல்யமானது.
ஒரு வருடத்துக்கு பிறகு ஆணைக்குழு பாலஸ்தீனத்தை யூத அரசாகவும் அரபு அரசாகவும் பிரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தது. அந்த நேரத்தல் பாலஸ்தீன சனத்தொகையில் யூதர்கள் சுமார் 28 சதவீதத்தினராக இருந்தனர். பீல் ஆணைக்குழுவின் யோசனையின் பிரகாரம் மேற்கு ஆற்றங்கரை, காசா பள்ளத்தாக்கு மற்றும் நெகெவ் பாலைவனம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அரபு அரசும் பாலஸதீனக் கரையோரத்தின் பெரும் பகுதியையும் வளமிக்க கலீலி பிராந்தியத்யைும் உள்ளடக்கியதாக யூத அரசும் அமையவேண்டும். அரபுக்கள் அந்த யோசனையை நிராகரித்தனர்.
இரண்டாவது உலகப்போருக்கு பிறகு பாலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட ஆணைக்குழு இன்னொரு பிரிவினைத் திட்டத்தை முன்வைத்தது. ஒரு யூத அரசு,ஒரு அரபு அரசு,ஒரு சர்வதேசப் பிராந்தியம் (ஜெரூசலேம்) என்று பாலஸதீனத்தை மூன்று பிராந்தியங்களாகப் பிரிக்கவேண்டும் என்பதே அந்த திட்டம்.
அதன் பிரகாரம் பாலஸ்தீன சனத்தொகையில் சுமார் 32 சதவீதமானவர்களாக இருந்த யூதர்களுக்கு பாலஸ்தீன நிலத்தின் 56 சதவீதம் சென்றடையும். அந்த பிரிவினைத் திட்டம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ( தீர்மானம் 181) ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரபுக்கள் திட்டத்தை நிராகரித்த அதேவேளை பாலஸ்தீனத்தில் இருந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் சியோனிச தலைமைத்துவம் அதை ஏற்றுக்கொண்டது. (
இந்தியா திட்டத்துக்கு எதிராகவே பொதுச்சபையில் வாக்களித்தது.)
சியோனிஸ்டுகள் 1948 மே 14 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலிய அரசை பிரகடனம் செய்தனர். அதையடுத்து முதலாவது அரபு -- இஸ்ரேல் யுத்தம் மூண்டது. 1949 ஆண்டில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட வேளையில், இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் திட்டத்தில் கூறப்பட்டிருந்ததையும் விட சமார் 22 சதவீதமான நிலப்பிராந்தியத்தை கூடுதலாக இஸ்ரேல் கைப்பற்றிவிட்டது.
சர்வதேச சட்டபூர்வத்தன்மை
1967ஆம் ஆண்டில் ஆறு நாள் போரில் ஜோர்தானிடமிருந்து இருந்து மேற்கு ஆற்றங்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேத்தையும் எகிப்திடமிருந்து காசா பள்ளத்தாக்கையும் சினாய் குடாவையும் சிரியாவிடமிருந்து கோலான் குன்றையும் இஸ்ரேல் கைப்பற்றியது.(1978 காம்ப்டேவிட் உடன்படிக்கைக்கு பிறகு எகிப்துக்கு திருப்பிக்கொடுக்கப்பட்ட சினாயைத் தவிர ஏனைய பிராந்தியங்கள் தொடர்ந்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன) பாலஸ்தீன தேசியவாதம் 1960 களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைத்துவத்தின் (பீ.எல். ஓ.) கீழ் பலம்பொருந்தியதாக வெளிக்கிளம்பியது.
தொடக்கத்தில் பீ.எல்.ஓ. முழுப் பாலஸ்தீனத்தினதும் " விடுதலையைக்" கோரியது. ஆனால் பிறகு 1967 எல்லைகளின் அடிப்படையில் இரு அரசு தீர்வை அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களின் எந்தவொரு நிலக் கோரிக்கையையும் தொடக்கத்தில் நிராகரித்த இஸ்ரேல் பீ.எல்.ஒ.வை பயங்கரவாத இயக்கம் என்று தொடர்ந்து கூறிவந்தது.
ஆனால், எகிப்தும் சிரியாவும் தாக்குதல் ஒன்றைத் தொடுத்து இஸ்ரேலை அதிர்ச்சியடையவைத்த 1973 யொம் கிபூர் போரைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட காம்ப்டேவிட் உடன்படிக்கையில் சமாதானத்துக்கான மத்திய கிழக்கு உடன்படிக்கைக் கட்டமைப்பு ஒன்றுக்கு இஸ்ரேல் இணங்கிக்கொண்டது. அந்த கட்டமைப்பின் ஒரு அங்கமாக மேற்கு ஆற்றங்கரையிலும் காசாவிலும் பாலஸ்தீன சுயாட்சி அதிகாரசபை ஒன்றை அமைப்பதற்கும் 1967 ஆம் ஆண்டில் கைப்பற்றிய சகல பிராந்தியங்களில் இருந்தும் படைகளை வாபஸ்பெறவேண்டும் என்று இஸ்ரேலைக் கோரிய ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை (242 ) நடைமுறைப்படுத்துவதற்கும் இஸ்ரேல் இணங்கிக்கொண்டது.
அந்த கட்டமைப்பு 1993 ஆம் ஆண்டிலும் 1995 ஆம் ஆண்டிலும் ஒஸ்லோ உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதற்கான அத்திபாரத்தை அமைத்தது. அந்த உடன்படிக்கைகள் இரு அரசு தீர்வுக்கு முறைப்படியான அந்தஸ்தைக் கொடுத்தன. ஒஸ்லோ செயன்முறைகளின் ஒரு அங்கமாக மேற்கு ஆற்றங்கரையிலும் காசாவிலும் சுயாட்சி அமைப்பான பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்டது. பாலஸ்தீனர்களின் பிரதிநிதித்துவ அமைப்பாக பீ.எல்.ஓ.வுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. இஸ்ரேலிய அரசுக்கு அருகாக சமாதானமான முறையில் இறைமையுடன் கூடிய பாலஸ்தீன அரசு ஒன்று அமைவதற்கு ஒஸ்லோவில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதமொழி ஒருபோதும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை.
இரு அரசு தீர்வுக்கான தடைகள்
உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்ட இஸ்ரேலிய பிரதமர் யிற்சாக் றாபின் யூத தீவிரவாதி ஒருவனால் 1995 ஆம் ஆண்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரின் கொலை ஒஸ்லோ செயன்முறைகளுக்கு முதலாவது பி்ன்னடைவாக அமைந்தது. அடுத்து வந்த தேர்தலில் றாபினின் தொழிற்கட்சி தோல்வியடைந்து பெஞ்சமின் நெதான்யாகுவின் தலைமையின் கீழ் வலதுசாரி லிகுட் கட்சி அதிகாரத்துக்கு வந்தது.
இஸ்ரேலியர்களுக்கு பீ.எல். ஓ. பெருமளவு சலுகைகளை கொடுத்துவிட்டது என்று கூறி ஒஸ்லோ உடன்படிக்கைகளை எதிர்த்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான ஹமாஸின் எழுச்சியும் சமாதான செயன்முறைகள் தடம்புரளுவதற்கு பங்களிப்பைச் செய்தது. 1900 களில் ஒஸ்லோ செயன்முறைகளின் வீழ்ச்சிக்கு பிறகு இரு அரசு கொள்கைக்கு புத்தூக்கம் அளிப்பதற்கு பல்வேறு இராஜநந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகளில் எந்த ஒன்றினாலும் இலக்கை அடைவதை நோக்கி முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை.
இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்களை அடையாளம் காணமுடியும். ஆனால் பிரத்தியேகமான கட்டமைப்புரீதியான காரணிகள் குறைந்த பட்சம் தற்போதைக்கு இரு அரசு தீர்வை அடையமுடியாமல் செய்கின்றன. ஒன்று எல்லைகள். இஸ்ரேலுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லை. அது அடிப்படையில் ஒரு விஸ்தரிப்புவாத அரசு. 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளினால் உறுதியளிக்கப்பட்டதை விடவும் கூடுதலான பிராந்தியங்களை இஸ்ரேல் கைப்பற்றியது. 1967 ஆம் ஆண்டில் வரலாற்று ரீதியான பாலஸ்தீனம் முழுவதையும் தனது கட்டுப்பாடடின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் இஸ்ரேல் தன்னை மேலும் விரிவுபடுத்திக்கொண்டது.
1970 களில் இருந்து பாலஸ்தீனப் பிராந்தியங்களில் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை நிர்மாணித்து வந்திருக்கிறது. தங்களது எதிர்கால அரசு 1967 ஆண்டின் எல்லைகளின் அடிப்படையில் அமையவேண்டும் என்று பாலஸ்தீனர்கள் கூறுகின்ற அதேவேளை, அது தொடர்பில் எந்த உறுதிப்பாட்டையும் தெரிவிக்க இஸ்ரேல் தயாராக இல்லை.
இரண்டாவது காரணி குடியேற்றவாசிகள் சம்பந்தப்பட்டதாகும். மேற்கு ஆற்றங்கரையிலும் கிழக்கு ஜெரூசலேத்திலும் தற்போது சுமார் ஏழு இலட்சம் யூத குடியேற்றவாசிகள் வசிக்கிறார்கள். 1967 ஆம் ஆண்டின் எல்லைகளுக்கு இஸ்ரேல் வாபஸ்பெறுவதாக இருந்தால் இந்த குடியேற்றவாசிகளையும் திருப்பியழைத்துக் கொள்ளவேண்டும். இன்று குடியேற்றவாசிகள் இஸ்ரேலிய சமூகத்தில் பலம்பொருந்திய ஒரு அரசியல் வர்க்கத்தினராக விளங்ககிறார்கள். அரசியல் விளைவுகளுக்கு முகங்கொடுக்காமல் எந்த இஸ்ரேலியப் பிரதமரும் குடியேற்றவாசிகளை திருப்பியழைத்துக் கொள்ளமுடியாது.
மூன்றாவது காரணி ஜெரூசலேத்தின் அந்தஸ்து. இஸ்லாத்தின் மூன்றாவது பெரிய புனித பள்ளிவாசலான அல் அக்சா அமைந்திருக்கும் கிழக்கு ஜெரூசலேமே தங்களது எதிர்காலப் பாலஸ்தீன அரசின் தலைநகராக இருக்கவேண்டும் என்று பாலஸ்தீனர்கள் கூறுகிறார்கள். அதேவேளை யூதாயிசத்தின் புனித தலமான மேற்குச்சுவர் அமைந்திருக்கும் ஜெரூசலேம் முழுவதும் தங்களது " ஆதி அந்தமில்லாத " தலைநகர் என்று இஸ்ரேல் கூறுகிறது.
நான்காவது காரணி அகிதிகள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான உரிமை. இஸ்ரேல் அரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது 1948 ஆம் ஆண்டில் சுமார் ஏழு இலட்சம் பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்தார்கள். சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு உரிமையுடையவர்கள். ஆனால் பாலஸ்தீன அகதிகள் திரும்பிவருவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.
இந்த கடடமைப்பு ரீதியான காரணகள் இரு அரசு தீர்வை களத்தில் சிக்கலாக்கியிருக்கும் அதேவேளை எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு இஸ்ரேலிய வலதுசாரி தலைமைத்துவம் தயாராயில்லை. தற்போதுள்ள நிலைவரம் தொடருவதை இஸ்ரேல் விரும்புகிறது. ஆனால் இந்த நிலைவரத்தை மாற்றவேண்டும் என்று பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள்.
நன்றி வீரகேசரி