ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு: ஜூன் 9ல் முதல்வராக பொறுப்பேற்பு
4 ஆனி 2024 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 2222
ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி கட்சிகள் 162 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஜூன் 9ல் அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பா.ஜ., மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு களத்தில் இறங்கினார்.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 04) நடந்து வருகிறது. ஒரு கட்சி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்க 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது நிலவரப்படி,
தெலுங்கு தேச கட்சி + பா.ஜ.,+ பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி- 162 தொகுதிகள்
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் - 13 தொகுதிகள்
காங்கிரஸ்- 0
ஜூன் 9ல் பதவியேற்பு
இதில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 130 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கின்றன. இதனையடுத்து அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஜூன் 9ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
2019ல்...!
கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 தொகுதிகளில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.