Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெள்ளத்தால் 1,61,000 பேர் பாதிப்பு - 17 பேர் பலி

இலங்கையில் வெள்ளத்தால் 1,61,000 பேர் பாதிப்பு - 17 பேர் பலி

4 ஆனி 2024 செவ்வாய் 13:45 | பார்வைகள் : 986


மேல், சப்கரமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று முதல் பலத்த மழையுடனான வானிலை தற்காலிகமாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளம் தொடர்ந்தும் தேங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கம்பஹா வைத்தியசாலையின் நுழைவாயில்களுக்குள்ளும் நீர் உட்புகுந்திருந்தது.

கம்பஹா - ஜா எல பஸ் நிலையத்திற்கு அருகிலும், கம்பஹா - கொழும்பு பஸ் நிலையம், வைத்தியசாலை சந்தி, கம்பஹா - மினுவங்கொடை புதிய வீதி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகமும் வௌ்ள நீரில் மூழ்கியது.

அத்தனகலு ஓயா பெருக்கெடுத்துள்ளதால், வத்தளை - ஜா எல பகுதிகளின் தாழ்நிலப்பகுதிகள், அடுத்து வரும் சில மணித்தியாலங்களில் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அடையாளங்காணப்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிங், களனி, களு கங்கைககளின் நீர் மட்டம் தொடர்ந்தும் அவதான மட்டத்திலேயே காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மழையினால் கடந்த 3 நாட்களில் 13 மாவட்டங்களை சேர்ந்த 1,61,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 17 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மாத்தறை மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு 06 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, 5 மாவட்டங்களின் 19 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்