வாக்னர் தலைவர் மரணம் தொடர்பில் மௌனம் கலைத்த ரஷ்யா ஜனாதிபதி

25 ஆவணி 2023 வெள்ளி 09:27 | பார்வைகள் : 7168
ரஷ்ய வாக்னர் கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் கூலிப்படை தலைவர் உயிரிழந்தமை தொடர்பில் ரஷ்யா ஜனாதிபதி மௌனம் கலைத்துள்ளார்.
பிரிகோஜின் மிகவும் திறமைவாய்ந்தவர் ஆனால் வாழ்க்கையில் பல பாரதூரமான தவறுகளை இழைத்தவர் என ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோவிற்கு வடமேற்கே இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்க புட்டின் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
விமான விபத்தின் பின்னர் கிரெம்ளின் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடித்ததுடன் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான வீடியோ உரையிலும் புட்டின் இது குறித்து எதனையும் குறிப்பிடவில்லை.
விமானவிபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என புட்டின் ரஷ்யாவிற்கான தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
உக்ரைனில் உள்ள நவநாஜி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பொதுவான இலக்கிற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் அவர்கள் என புட்டின் தெரிவித்தார்.
பிரிகோஜின் குறித்து கருத்து வெளியிட்ட புட்டின், 90களின் ஆரம்பம் முதல் அவரை எனக்கு தெரியும் என்றும் , அவர் குழப்பகரமான வாழ்க்கையை கொண்டவர் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை வாக்னர் குழு தலைவர் பிரிகோஜினையும் அவரது படையினரையும் உக்ரைனில் அவர்களின் பங்களிப்பையும் புட்டின் பாராட்டினார்.