Paristamil Navigation Paristamil advert login

காசா போர் நிறுத்தம் தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

காசா போர் நிறுத்தம் தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

7 ஆனி 2024 வெள்ளி 09:15 | பார்வைகள் : 884


பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. 

இந்த சண்டையில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்தவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் தொடரும் என்றும் ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

இதனால் இந்த போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

எகிப்து வெளியுறவு துறை மந்திரி சமே ஷோத்ரி கெய்ரோவில் அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதிகளுடன் காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தநிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் இது வரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்- அன்சாரி தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்