டி20 பிளாஸ்ட் போட்டி - சர்ரே அணியை வீழ்த்திய சசெக்ஸ் அணி
8 ஆனி 2024 சனி 03:19 | பார்வைகள் : 891
டி20 பிளாஸ்ட் போட்டியில் சசெக்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சர்ரே அணியை வீழ்த்தியது.
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் சசெக்ஸ் (Sussex) மற்றும் சர்ரே (Surrey) அணிகள் மோதின.
முதலில் ஆடிய சசெக்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது. அல்சோப் 35 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
டேனியல் ஹுயூக்ஸ் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்தார்.
மெக்ஆண்ட்ரு 15 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
டாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், டேனியல் லாரன்ஸ் 2 விக்கெட்டுகளும், ஸ்பென்ஸர் ஜான்சன் மற்றும் ஜோர்டான் கிளார்க் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சர்ரே அணியில் தொடக்க வீரர்கள் லாரி எவன்ஸ் (12), டேனியல் லாரன்ஸ் (6) சொதப்பினர்.
அடுத்து வந்த ஜேசன் ராய் 22 பந்துகளில் 26 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 8 பந்துகளில் 18 ஓட்டங்களும் விளாசினர்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பிய நிலையில், அணித்தலைவர் ஓலி போப் (Ollie Pope) தனியாளாய் போராடினார். எனினும், சர்ரே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
ஓலி போப் ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 99 ஓட்டங்கள் எடுத்தார்.
இதில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். சசெக்ஸ் அணியின் தரப்பில் நாதன் மெக்ஆண்ட்ரு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.