Paristamil Navigation Paristamil advert login

சூழலை பாதுகாப்பது தனிமனித கடமை 

சூழலை பாதுகாப்பது தனிமனித கடமை 

8 ஆனி 2024 சனி 10:13 | பார்வைகள் : 1111


உலக சுற்றுச்சூழல் தினமானது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  மக்களையும், நிறுவனங்களையும் ஒன்று திரட்டவும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும்  ஓர் உலகளாவிய தளமாக செயற்படுகின்றது. இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. 

இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெல்லாம் சுற்றுச்சூழல் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. 

இந்த விடயத்தில் உள்ள சிக்கல் தன்மை. பாதகத்தன்மை மற்றும் இதன் முக்கியத்துவம் ஆகிய அனைத்தும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுக்கிறது. சுற்றுச்சூழல் என்ற விடயத்திற்கும், அபிருத்திக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றதாகவும், விளங்கிக் கொள்வதற்கு கடினமானதாகவும் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் மனிதன் சுற்றுச்சூழலின் இயற்கைச் சமனிலையைப் பற்றி பூரணமாக அறியாமல் இருப்பதாகும். 

அண்மைக் காலங்களில் விஞ்ஞானத்துறையானது மிகவும் முன்னேற்றம் அடைத்துள்ள போதிலும் எம்மால் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவை இன்னும் பூரணமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல இந்த அறிவை வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவற்றினைப் பேணுதல் போன்றவற்றிலும் அபிவிருத்தி, நின்று நிலைக்கும் பயன்பாடு போன்றவற்றிலும் கூட எம்மால் பூரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் அநேக துறைகளில் இன்று சூழல்க்கல்வி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் அண்மைக் கால உலக சூழல் நெருக்கடியாகும். 

சர்வதேச சமூகத்தின் சூழல் பற்றிய ஈடுபாட்டை இனங்காண ஐக்கிய நாடுகள் சபையால் 1972ஆம் ஆண்டு ஸ்ரோக்கம் நகரில் நடைபெற்ற சூழல் மகாநாட்டில் சுற்றுச்சூழலை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது உலக சுற்றுச்சூழல் தினமானது “ஒரே ஒரு பூமி” எனும் கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து யூன் மாதம் ஐந்தாம் திகதி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஆய்வுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான (2024) ஆய்வுப்பொருள் அல்லது தொனிப்பொருள் “நிலமறுசீரமைப்பு, பாலைவனமாதலும் வரட்சியைத் தாங்கும் திறனும்” என்பதாகும். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் 150இற்கும் மேற்பட்ட நாடுகள் சுற்றுச்சூழல் தினத்தில் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு (2024) உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துவதற்கான தொகுப்பாளராக சவூதி அரேபியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்த ஐக்கிய நாடுகள் தசாப்தத்தின் (2021-2030) முக்கிய தூணாக “நிலமறுசீரமைப்பு” உள்ளது. 

சூழல் மாசடைதல் 

உலகளாவிய ரீதியில் நாடுகளை பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். இத்தகைய இரண்டு வகையான நாடுகளிலும் குடித்iதாகை அதிகரிப்பு, நகராக்க விருத்தி, கைத்தொழில் மயமாக்கம் என்பன பொதுவாகக் காணப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பிற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே மனிதன் தனது தேவைகளை நிவர்த்தி செய்ய  முற்படும் போது அதன் விளைவாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகவே சூழல் மாசடைதல் காணப்படுகின்றது. இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தால் குழப்பப்படும் போது அது சூழல்த் தொகுதியில் அல்லது சுற்றாடத் தொகுதியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சூழல் தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும்பத்தகாத அல்லது பாதகமான பெரும்பாலும் மீள முடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். 

அபிவிருத்தி நோக்கிய மனித நடத்தையினால் இன்று சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது. மனிதர்களின் அலட்சியப் போக்குக் காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல், குடித்தொகைப் பெருக்கம் ஆகிய காரணங்களால் சூழல் பலவகையாக மாசுபடுகின்றது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால் இயற்கை மழையைப் புவி இழந்துள்ளது. போர் சூழலினாலும், அணுப் பரிசோதனைகளினாலும் அழிவுகளைப் புவி எதிர் நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. 

நகரங்களில் வசதிவாய்ப்புக்கள். அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக கிராமப்புற வசதிபடைத்த மக்கள் நகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயருகின்றனர். இதன் காரணமாக நகர்ப் பகுதிகளில் கிராமங்களை விட சூழல் மாசடைதல் அதிகமாகக் காணப்படுகின்றது இந்த வகையில் சூழலில் உள்ள பல்வேறு கூறுகளும் அதாவது நிலம், நீர், வளி ஆகிய கூறுகள் மனிதனுடைய பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மாசடைகின்றன.

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலவாழ்வை அச்சுறுத்தும் ஏராளமான சுற்றுச்சூழல் சவால்களை உலகம் எதிர்கொள்கின்றது. அதில்சில காலநிலை மாற்றம், உயிர்பல்வகைமைப் பாதிப்பு, வளங்கள் குறைவடைதல், மாசுபாடுகள், பச்சை வீட்டு விளைவும், பூகோள வெப்பமாதலும், ஓசோன் படைத் தேய்வு, காடழிப்பும், பாலைவனமாதல், அமில மழை போன்றனவற்றைக் குறிப்பிடலாம். நவீன விஞ்ஞான, தொழினுட்ப, கைத்தொழில் துறையின் வளர்ச்சி காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகின்றது. 

இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர்நிலைகள், நிலம், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் அது உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகின்றது. மனிதன் சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். தான் நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி என்று இயற்கை அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டே இருக்கின்றன. 

சீரற்ற காலநிலை நிலவும் குளிர் பிரதேசங்களில் தாவரங்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடியிலான முடிய அமைப்பு முறையையே ‘பச்சை வீடு’ என அழைக்கப்படுகின்றது. பூமி அதிகளவில் வெப்பமடைவதால் ‘பச்சை வீட்டு விளைவானது’ நிகழ்கின்றது. இத்தாக்கம் பற்றி முதன் முதலில் 1827இல் டீயசழn துநயn டீயளவளைவந குயரசiநெச  என்பவரால் விபரிக்கப்பட்டது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும் காபனீரொட்சைட்டினதும், மெதென், நைதரசன் ஒட்சைட்டு, ஓசோன், நீராவி, குளோரோபுளோரோ காபன்கள் ஆகியவற்றின் பொறிமுறை செயற்பாடாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் மனித நடவடிக்கைகளினால் வெளிவிடப்படும் வாயுக்களின் பங்களிப்பினை மாற்றியமைப்பதோடு இவ்வாயுக்களின் செயற்பாட்டையும் பாதிக்கின்றது. இதனால் வளி மண்டலம், உயிர் மண்டலம், நீர் மண்டலம், நில மண்டலம் என்பவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இவ்வாயுக்களின் அதிகரிப்பினால் வெப்பநிலை அதிகரித்தல், மழைவீழ்ச்சி மாதிரியில் வேறுபாடு, காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, நீரியல் வட்டத்தில் பாதிப்பு, சூறாவளிகள், புயல்கள் போன்றவற்றின் உருவாக்கம், சமுத்திர நீரோட்டங்களின் திசை மாறுதல், தாவரங்கள், விலங்குகளில் ஏற்படும் தாக்கம்  போன்றன ஏற்படுவதோடு மனிதனின் சமூக, பொருளாதார கட்டமைப்புகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. 

கோள வெப்ப அதிகரிப்புக் காரணமாக முனைவுப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகும் வேகம் படிப்படியாக அதிகரித்துள்ளது. ஆட்டிக், அந்தாட்டிக் பகுதிகளில் மட்டுமன்றி இமயமலையிலுள்ள பனிக்கவிப்புகளும் உருகத் தொடங்கி உள்ளன. 1999ஆம் ஆண்டுத் தகவலின் படி இமயத்தின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் பனி உருகி வழிந்ததில் அதன் உயரத்தில் 1.3 மீற்றர் குறைந்துள்ளது. இப்போது ஆண்டிற்கு சராசரியாக 0.1மீற்றர் என்ற அளவில் பனி உருகிக் கொண்டிருக்கின்றது. 

இந்த நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டளவில் சீனாவிலுள்ள பனிமலைகளில் 65வீதம் உருகிவிடும். கோள வெப்ப அதிகரிப்பு காரணமாக பசி, பட்டினியாலும், மலேரியா, வயிற்றுப்போக்குப் போன்ற வெப்ப மண்டல நோய்களாலும் ஏழை நாடுகளில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பு 2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக உயரும் என அஞ்சப்படுகிறது. இதில் அனுதாபதிற்குரிய விடயம் கோள வெப்ப உயர்வால் அதிகம் தண்டிக்கப்படும் இவர்கள் பூகோளத்தை வெப்பப்படுத்தும் செயல்கள் எதிலும் தொடர்புபடாத அப்பாவி ஏழைமக்கள் என்பது தான். இக்கோள வெப்ப அதிகரிப்புக் காரணமாக ஓசோன் படையில் துவாரம் ஏற்பட்டுள்ளதோடு ஓசோன் படை தேய்வடைந்தும் செல்கின்றது. ஓசோன் படையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் வளர்ந்த, வளர்முக நாடுகளில் அமில மழை உருவாக்கம், பாலைவன பரவலாக்கம் என்பன அதிகரிக்கும். 

பூகோள சூழற் பிரச்சினைகளில் ஒன்றாக விளங்கும் அமிலமழையானது இன்றைய காலகட்டத்தில் சூழலை மாசடையச் செய்து மக்களை அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகக் காணப்படுகிறது. இது 1980களின் பின்னரே தீவிரமடைந்த ஒரு நிகழ்வாகும். அமில மழை என்பது எரிபொருட் படிமங்களை எரிக்கும் போது உருவாக்கப்படும் சல்பரொக்சைட், நைதரசன் போன்ற பிரதான வாயுக்களை உள்ளடக்கிய மாசுப் பொருட்கள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகி அமிலத் தன்மையடைந்து வளிமண்டலத்தினூடாக எடுத்துச் செல்லப்பட்;டு மீண்டும் மழையாகப் பொழிதலைக் குறிக்கின்றது. இவ் அமிலமழைப் பொழிவினால் நீர்ச் சூழல்பாதிக்கப்படல், மண்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படல், மண்ணின் வளம் குறைவடைதல், மனித சுகாதாரம் பாதிக்கப்படல், கட்டடங்கள் ஓவியங்கள் பாதிக்கப்படல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

உயிர்ப்பல்வகைமை என்பதில்  புவியில் காணப்படும் சகல விதமான உயிரினங்களும் அவற்;றின் வாழ்விடங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் புவியில் 30 மில்லியன் முதல் 100 மில்லியன் வரையிலான அளவில் அங்கிகள் காணப்படலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவ்அங்கிகளிடையே சுமார் 1.5 மில்லியன் மாத்திரமே விஞ்ஞர்ன ரீதியாக சிறப்பாக ஆராய்ந்தறிந்து பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூமியில் வாழும் மொத்த அங்கிகளில் 50 சதவீதமானவை அயன மண்டலத்தினுள் இனங்காணப்பட்டுள்ளன. அதேநேரம் இவ்வயனமண்டலக் காடுகள் வருடாந்தம் மனிதநடவடிக்கைகளினால் ஒரு சதவீதம் என்ற அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக அயன மண்டலத்தில் 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உயிரினப் பல்வகைமையானது துரிதமாக அழிவிற்குட்பட்டு வருவது தெளிவாக இனங்காணப்பட்டதன் விளைவாக 1992ஆம் ஆண்டு உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் நிலைத்திருக்க் கூடிய விதத்தில் அவற்றைப் பயன்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைச் சூழல் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. இம்மாநாட்டில் 160ற்கும் மேற்பட்ட நாடுகள் உயிரின வளங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை நிலையான அடிப்படையில் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டு கையொப்பமிட்டன. 

உயிரினப் பல்வகைமையானது உயிரியல், பொருளாதார, கல்வி, கலாசார, மனோத்துவம், அழகியல் எனப் பல்வேறு விதங்களில் முக்கியம் பெறுகின்றது. எனினும் இவ்வுயிர்ப் பல்வகைமையானது மனிதனது நேரடியான தாக்கங்களிற்கு உட்பட்டு வருவதுடன் திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு, இயற்கை வளங்களின் அதிகரித்த பாவனை என்பன காரணமாகவும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. மனிதன் உட்பட்ட சூழல்த் தொகுதியில் வாழ்கின்ற ஒவ்வொரு அங்கியும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டு ஒரு வலையமைப்பில் வாழ்ந்து வருகின்ற அதே நேரம் இவை ஒவ்வொன்றும் முக்கிய பங்களிப்புகளை அவற்றின் வாழ்க்கையில் நிலைப்பிற்காகச் செய்து கொண்டிருக்கின்றன.

சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கான வழிகள்

பூமியில் உள்ள கூறுகள் மாசடைதலைத்  தடுப்பதற்கு சர்வதேச ரீதியாக இப்பிரச்சினை இன்று ஆராயப்படுகிறது. மேற்குலகில் சூழல் தொடர்பான விடயங்கள் அரசியலில் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாரளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப்பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன. உலக நாடுகளின் அரசாங்கங்களோடு இவ்வெண்ணக் கருவை கவனமெடுக்கும் விஞ்ஞான நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன. 

சூழல் மாசடைதல் தொடர்பான விழிப்புணர்ச்சிச் செயற்பாடுகள் கையாளப்படுகின்றன. சிறப்பாக சூழல் மாசடைதலைத் தடுக்கும் இந்த நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக இருக்கக் கூடிய பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் சூழல் பற்றிய கல்வியுறிவு, மாசடைதலைத் தடுக்கும் எச்சரிக்கைகள், பிரசாரங்கள் என்பனவெல்லாம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் முக்கிய வளங்களான நீர், காற்று, நிலம், வனம், கனிமங்கள் போனவற்றின் அழிவினை தடுப்பதற்கான பரிகார நடவடிக்கைகளில் எல்லாத் தரப்புகளும் கவனம் செலுத்தி வருவது நல்லதொரு செயற்பாடு ஆகும்.

 அந்த வகையில் மரங்களை நடுதல், இயற்கைப் பசளைகளை பயன்படுத்துதல், குப்பைகூழங்கள் எரிப்பதை தவிர்த்து மண்ணிணுள் புதைத்தல், உக்காத பொருட்களை பொருத்தமான முறையில் அகற்றுதல், பொலித்தீன் பயன்பாட்டினை தடை செய்தல் போன்ற செயற்பாடுகளின் மூலம் சூழலை மாசடைவதை தடுக்கலாம். இந்தவகையில் 2025 ஆம் ஆண்டு சுற்றாடல்தின ஆய்வுப்பொருளாக  “பிளாஸ்ரிக் மாசுபாட்டிற்கான முடிவு” என்பதாகும். 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்துவதற்கான தொகுப்பாளராக கொரியா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்திந்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகச் சிந்தித்து செயற்படும் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கும். பொதுவாக நாம் மகிழுந்து, மோட்டார் சைக்கிள் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 

நூறு பேர் நூறு வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக அனைவரும் பொதுப் போக்குவரத்தாகிய பேரூந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை வெளிவிடுவதை தடுக்க முடியும். அதேபோல் புகை வெளிவிடும் வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும். செய்தித்தாள் ஒன்றை ஒன்பது முறை மறுசுழற்சி செய்ய முடியும். எனவே செய்தித்தாள்களைப் படித்துவிட்டு கீழே வீசவேண்டாம். ஒரு மீற்றர் உயரத்திற்கு அடுக்கப்பட்ட செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் ஏழு மீற்றர் உயரமுள்ள மரம் ஒன்று வெட்டப்படுவதைத் தடுக்கலாம். ஆகவே சூழல் மாசடைவதைத் தடுக்க வேண்டியது மனிதராய் பிறந்த எங்கள் ஒவ்வொருவருடைய பெறுப்பும், கடமையும் ஆகும். 

கலாநிதி திருமதி சுபாஷினி உதயராசா
சிரேஷ்ட விரிவுரையாளர்
புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம் 

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்