ஆலங்கட்டி விழுந்து விமானத்தின் கண்ணாடிகள் சேதம்!
11 ஆனி 2024 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 2610
ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற பறந்துகொண்டிருந்த விமானத்தின் கண்ணாடிகள் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது.
அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது.
இந்நிலையில் , விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
எனினும் , மூன்று அடுக்குகளை கொண்டு பலப்படுத்தப்பட்ட ஜன்னல்களால் விமானத்திற்குள் ஆலங்கட்டி மழை ஊடுருவவில்லை.
அதேவேளை மணித்தியாலத்திற்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணிக்கும் போது ஆலங்கட்டி மழை அல்லது பிற கடினமான பொருட்களால் தாக்கப்பட்டால் ஜன்னல்கள் உடைந்து போகாமல் இருப்தை உறுதிப்படுத்த ஏர்லைனர் விண்ட்ஸ்கிரீன்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது
இந்நிலையில் சேதத்தை பொருட்படுத்தாமல் விமானம் பத்திரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை 2017 ஆம் ஆண்டில், இதேபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்ட விமானம் பத்திரமாக தரையிறக்கிய பின்னர் விமானி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.