■ நிலத்தடி நீரை பாழாக்குமா Mégabassine திட்டம்..?? 3,000 காவல்துறையினர், ஜொந்தாமினர் குவிப்பு..!!
16 ஆடி 2024 செவ்வாய் 09:39 | பார்வைகள் : 3542
அரசாங்கம் முன்னெடுத்து வரும் Mégabassine திட்டத்தை எதிர்த்து, ஜூலை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலத்த வன்முறை பதிவாகலாம் என்பதால், 3,000 ஜொந்தாமினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
Mégabassine திட்டம் என்றால் என்ன..?
"Mégabassine" என அழைக்கப்படும் இந்த திட்டமானது வயல் நிலங்களுக்கு இடையே இராட்சத அளவில் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களை அமைப்பதாகும். 15 மீற்றர் வரை ஆழம் கொண்ட, 650,000 கன மீற்றர் அளவு தண்ணீரை சேமிக்கக்கூடிய இராட்சத கிடங்குகளை அமைக்கும் திட்டமாகும். கோடைகாலங்களில் இவற்றில் இருந்து வயல்களுக்கு தண்ணீரை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
ஏன் எதிர்ப்பு..??
மேற்படி இந்த திட்டம் தற்போது மேற்கு பிரான்சின் Sainte-Soline எனும் கிராமத்தில் இடம்பெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என ஒரே நேரத்தில் பலதரப்பட்ட அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபோன்ற இராட்சத கிடங்குகள் தோண்டப்பட்டால் நிலத்தடி நீர் நிரந்தரமாகவே இல்லாமல் போய்விடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்துக்கு மேலே குளம் அமைப்பது போன்று அல்லாமல், நிலத்துக்கு கீழே இதுபோன்ற ஒலிம்பிக் நீச்சல் தடாகங்களை விட 260 மடங்கு பெரிய கிடங்குகள் அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
போராட்டம்..!
இந்த திட்டம் ஆரம்பித்த நாட்களில் இருந்து அப்பகுதி மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இதுவரை 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த வன்முறை வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 3,000 ஜொந்தாமினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.