ஒரே பிரச்னை; இரு வேறு புகார்கள்: சிக்கிய விஜயபாஸ்கர் சிறையில் அடைப்பு

18 ஆடி 2024 வியாழன் 03:06 | பார்வைகள் : 4083
நிலம் அபகரிப்பு புகாரில், கைது செய்யப் பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 50; தொழில் அதிபர்.
இவரது மகள் ஷோபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்கள் வாயிலாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் கிரையம் செய்து கொண்டதாக, கரூர், மேலக் கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர், கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, தொழில் அதிபர் பிரகாஷும், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஜூன் 22ல் புகார் அளித்தார். அதில், அதே தோரணகல்பட்டியில் இருக்கும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டதோடு, இதைக் கேட்டதும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், வாங்கல் போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு மற்றும் வாங்கல் போலீசார் பதிந்துள்ள வழக்கு ஆகியவற்றில் முன் ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில், கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, கடந்த 6ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை, சார் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலான வழக்கில், நேற்று முன்தினம் காலை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, கரூருக்கு அழைத்து வந்து, கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன், ஆஜர்படுத்தினர்.
அப்போது, 'நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர், முதல் தகவல் அறிக்கையில் இல்லை. பதிவு செய்யப்பட்ட நிலமும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் இல்லை. அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என, வக்கீல்கள் வாதாடினர்; அரசு தரப்பு வக்கீல்கள் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்குமார், விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை வரும் 31 வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும், நேற்று காலை அடைக்கப்பட்டனர்.
கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட புகாரில் வாங்கல் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கிலும், விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படுவார் என, போலீசார் கூறுகின்றனர்.
'மாஜி'க்கு உதவிய இன்ஸ்பெக்டர் கைது
இதே நில அபகரிப்பு விவகாரத்தில், சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய, சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த பிரித்விராஜ் உடந்தையாக இருந்தார் என, குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்தும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து அவரை கைது ெசய்தனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பிரித்விராஜ், இன்ஸ்பெக்டராக கரூர் டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது தான், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, வழக்கறிஞர் ஒருவர் வாயிலாக, போலி ஆவணங்கள் தயாரிக்க உதவி செய்துள்ளார்.
'நில அபகரிப்பு செய்யப்பட்ட இடத்திற்கான ஆவணங்கள் தொலைந்து போய் விட்டன. அதை கண்டுபிடித்து தர வேண்டும்' என, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினரால், கரூர் டவுன் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ், மனுவை முறைப்படி விசாரிக்காமல், 'ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் வழங்கி, நில அபகரிப்புக்கு உதவி செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
22 ஏக்கர் நிலத்தின் மதிப்புரூ.100 கோடியா?
கரூரில் இருந்து, 15 கிலோ மீட்டர் துாரத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்னம்பட்டி, தோரணகல்பட்டி பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. ஆனால், அந்த பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலம், 100 கோடி ரூபாய் மதிப்பு என, மீடியாக்களில் தகவல் பரவுகிறது. ஆனால், 22 ஏக்கர் நிலம், தற்போதைய சந்தை நிலவரப்படி, 10 முதல் 12 கோடி ரூபாய் மட்டுமே விலை போகும் என, பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.