Paristamil Navigation Paristamil advert login

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

18 ஆடி 2024 வியாழன் 03:09 | பார்வைகள் : 1431


நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக, ஊட்டி, குந்தா, கூடலுார், மற்றும் பந்தலுார் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை, 10 வீடுகளில் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதமாகியுள்ளது.

அந்தந்த பகுதி வருவாய்த்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மாலை வரை, 30 பேர் நிவாரண முகங்களில் தங்கியுள்ளனர்.

ஊட்டி, இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில், 15 இடங்களில் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வருவாய் துறையினருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் படிப்படியாக நிரம்பி வருவதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உரிய நிவாரணம் வழங்கப்படும்


மாவட்டத்தில் மலை காய்கறி அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி மார்க்கெட் மண்டிகள் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவிலான மலை காய்கறிகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

ஊட்டி அருகே எம்.பாலாடா கொல்லிமலை ஓரம் நள்ளி, கல்லக் கொரைஹாடா உள்ளிட்ட பகுதிகளில் மலை காய்கறிகள் நீரில் மூழ்கியுள்ளது.

மலை காய்கறிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தந்த பகுதிகளில், வேளாண் உதவி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

'மலை காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.


வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்


ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் பிற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஊட்டி படகு இல்லத்தில் இரண்டாவது நாளாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம், பைன்பாரஸ்ட் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ''மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்கள் தங்கும் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என்றால் உடனே, வருவாய் துறையை அணுகி அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்