அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடத்தியதால் இத்தனை கோடி இழப்பு - ஐசிசி தகவல்
18 ஆடி 2024 வியாழன் 09:19 | பார்வைகள் : 559
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதற்கிடையே, ஐ.சி.சி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் டி 20 உலகக் கோப்பை தொடரை நடத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு இந்திய அணி செல்ல மறுப்பது, ஐ.சி.சி தலைவர் பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ.167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முக்கியமாக, நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மிக எதிர்பார்க்கப்பட்ட போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் அமெரிக்காவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.சி.சி. தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவை அடுத்த ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க வலியுறுத்தப்படலாம் என தகவல் வெளியானது.