நாளை வெளியாகிறது நீட் தேர்வின் முடிவு!
19 ஆடி 2024 வெள்ளி 03:09 | பார்வைகள் : 833
நீட் தேர்வின் முடிவுகளை நகரம் வாரியாக, தேர்வு மையம் வாரியாக, மாணவர்களின் பெயர்கள் இன்றி, சனிக்கிழமையான நாளை மதியம் 12:00 மணிக்குள் வெளியிட வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது.
வெளிநாடுகளில் 14 இடங்கள் உட்பட நம் நாட்டில் 571 நகரங்களில், 4,750 மையங்களில் தேர்வு நடந்தது. இதை, 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது.
வினாத்தாள் லீக்
இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வினாத்தாள் லீக் ஆனது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், ஓ.எம்.ஆர்., எனப்படும் விடைத்தாளில் மோசடி என, பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.
மறுதேர்வு நடத்தக்கூடாது என்றும் வழக்குகள் தொடரப்பட்டன. வெவ்வேறு கோர்ட்களில் நீட் தொடர்பாக தாக்கலான வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க என்.டி.ஏ., வழக்கு தொடர்ந்தது. எல்லாமாக, 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின.
தேர்வு மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.
மற்ற வழக்குகளை தள்ளிவைத்து, இந்த மனுக்களை நீதிபதிகள் விசாரித்தனர்.
நீதிபதிகள் உத்தரவு
நீண்ட விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுதும் நடந்ததாக அல்லது திட்டமிட்டு கசிய விட்டதாக உறுதியாக தெரிந்தால் மட்டுமே, நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும்.
சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்த தகவல்கள் எங்களிடம் தரப்பட்டன. அவற்றை இப்போது வெளியிட்டால், அது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மோசடி செய்தவர்கள் தப்பிக்க வழிவகுத்துவிடும்.
முதல்கட்ட தகவல்களின்படி, ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மற்றும் பீஹாரின் பாட்னாவில் வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிகிறது. குஜராத்தின் கோத்ராவில் ஓ.எம்.ஆர்., ஷீட் எனப்படும் விடைத்தாளில் மோசடி நடந்துள்ளது.
ஆனால், இரண்டு சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை. டெலிகிராம் சமூக வலைதளத்தின் வழியாக வினாத்தாள் கசிய விட்டுள்ளனர்.
அவர்களுடைய நோக்கம், குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது தான். அதனால், எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் பொதுவாக வெளியிட்டிருக்க மாட்டார்கள். மேலும், நாடு முழுதும் வினாத்தாள் கசிய விடுவதற்கு, பெரிய அளவில் தொடர்புகள் தேவை.
அதனால், இது ஒரு சிலரின் குறுகிய நோக்கமே தவிர, தேர்வின் மதிப்பை குறைப்பதோ, தேர்வின் நம்பகத்தன்மையை குலைக்கும் முயற்சியாகவோ தெரியவில்லை.
தேர்வு முடிவு ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மாணவர்கள் ஒவ்வொருவரும் தன் மதிப்பெண் என்ன என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர்? எந்த தேர்வு மையங்களில் அல்லது நகரங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது தெரியாது.
இதனால், மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை, நாளை மதியம் 12:00 மணிக்குள் என்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். தேர்வு மையம் வாரியாக, நகரம் வாரியாக பட்டியல் வெளியிட வேண்டும். மாணவர்களின் விபரம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் வாயிலாக, எந்தெந்த தேர்வு மையங்கள் அல்லது நகரங்களில் மோசடி நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை, 22ம் தேதி நடக்கும் என அறிவித்தனர்.
4 எய்ம்ஸ் மாணவர்கள் கைது
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் உள்ள பெட்டியில் இருந்து, நீட் வினாத்தாளை திருடியதாக பங்கஜ் குமார் என்பவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் பீஹார் மாநிலம் பாட்னாவில் இரு நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவருக்கு உதவியதாக ராஜு சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் நான்கு பேரை நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.