உயிரிழந்த செல்லப் பிராணிகளுடன் உயிர்வாழ்ந்த 52 வயதான பெண் கைது.
19 ஆடி 2024 வெள்ளி 06:41 | பார்வைகள் : 3429
பிரான்சின் Belfort நகரில் உள்ள வீடு ஒன்றில் அதிக துர்நாற்றம் வீசுகிறது என காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீடு காவல்துறையினரால் சோதனையிட்டபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பதின்நான்கு பூனைகள் குளிர்சாதன பெட்டியிலும், மேலும் ஆறு பூனைகள் உயிரிழந்து அழுகிய நிலையிலும், சுமார் முப்பது விலங்குகள் இருள், குப்பை, மலம் போன்றவற்றின் மத்தியிலும் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அனாதரவாக விடப்படும் செல்லப்பிராணிகளை பராமரிக்கும் SPA அமைப்பு அங்கு உயிருடன் இருந்த நாய்கள், பறவைகள் போன்ற உயிரினங்களை கைப்பற்றிய போது அவை துன்புறுத்தப்பட்டு பலத்த காயங்கள் அடைந்த நிலையிலும், சோர்வுற்ற நிலையிலும் இருந்துள்ளன.
இதனையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த 52 வயதான பெண் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் மனவளம் பாதிக்கப்பட்டவர் அல்ல என தெரிவித்துள்ள காவல்துறையினர், குறித்த பெண் செல்லப் பிராணிகளை வாங்கினாரா, களவெடுத்தாரா, ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என இதுவரை அவர் எதையும் பேச மறுப்பதாகவும், "எனக்கு அவை தேவை எனவேதான் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தேன்' என்று மட்டுமே தெரிவித்துள்ளார் எனவும் அவரைநீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் செல்லப் பிராணிகளை முறைதவறி வளர்த்தல், அவற்றை துன்புறுத்துதல், அவை உயிரிழந்தால் முறைப்படி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கு தெரியப்படுத்தி அவற்றை அடக்கம் செய்யத் தவறுதல் போன்றவை சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு நடந்தால் குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சுமார் 45,000€ வரை குற்றப் பணமும் அறவிடப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.