விமான நிலையங்களில் இயல்பு நிலை: மத்திய அரசு விளக்கம்
20 ஆடி 2024 சனி 06:00 | பார்வைகள் : 1377
இந்திய விமான நிலையங்களில் இன்று (ஜூலை 20) அதிகாலை 3 மணி முதல் இயல்பு நிலை திரும்பியது என மத்திய அரசு கூறியுள்ளது.
‛மைக்ரோசாப்ட் ' நிறுவனத்தின் ‛ விண்டோஸ் - 10,11' இயங்குதளங்கள் நேற்று முடங்கியதால், உலகின் பல்வேறு பகுதிகளிலும் விமான புறப்பாடு, வங்கி பரிவர்த்தனைகள், மருத்துவ சிகிச்சைகள், செய்தி ஒளிபரப்புகள் பல மணி நேரம் முடங்கியது. உலகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கட்டணம் திருப்பி தருவது
விமான நிலையங்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் நிலைமை சீரானது. வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதள பிரச்னையால் நேற்று ஏற்பட்ட பிரச்னை படிப்படியாக சீராகி வருகிறது. இன்று மதியத்திற்குள் அனைத்தும் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ரத்தான விமான பயணங்களுக்கான கட்டணம் திருப்பி தருவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.