ரூ.738 கோடி வருமானம் ஈட்டிய சந்திரசேகர ராவ் கட்சி: மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு?
20 ஆடி 2024 சனி 06:03 | பார்வைகள் : 1026
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி, 737.67 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது' என, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 57 மாநில கட்சிகளில், 39 கட்சிகள், 2022 - 23ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானம், செலவு குறித்த அறிக்கையை, ஏ.டி.ஆர்., வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 39 மாநில கட்சிகளில், 2022 - 23ம் நிதியாண்டில், தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி, 737.67 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது.
இதைத் தொடர்ந்து, திரிணமுல் காங்., 333.45 கோடி ரூபாய்; தி.மு.க., 214.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், தேர்தல் பத்திரங்கள். அதிக செலவு செய்த கட்சிகளில், 181.18 கோடி ரூபாயுடன், திரிணமுல் காங்., முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர்-.காங்., 79.32 கோடி ரூபாய்; பி.ஆர்.எஸ்., 57.47 கோடி ரூபாய்; தி.மு.க., 52.62 கோடி ரூபாய் மற்றும் சமாஜ்வாதி 31.41 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.
செலவு
ஆண்டு தணிக்கை கணக்குகளை சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் விதித்த காலக்கெடுவை தாண்டி, 23 கட்சிகள் தாமதமாக சமர்ப்பித்துள்ளன. சிவசேனா, போடோலாந்து மக்கள் முன்னணி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் உட்பட, 18 பிராந்தியக் கட்சிகளின் தணிக்கை அறிக்கைகள், ஆய்வின் போது தேர்தல் கமிஷன் இணையதளத்தில் கிடைக்கவில்லை.
தங்கள் வருமானத்தை விட, 20 கட்சிகள் அதிகமாக செலவழித்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் வருமானத்தை விட, 490.43 சதவீதம் அதிகமாக செலவு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.