இலங்கையுடனான 2ஆவது இளையோர் டெஸ்டில் இன்னிங்ஸால் வென்ற பெற்ற இங்கிலாந்து
20 ஆடி 2024 சனி 14:56 | பார்வைகள் : 801
செல்டன்ஹாம், கொலேஜ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2ஆவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
19 வயதுக்குட்பட்ட இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த இரண்டாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று வெள்ளிக்கிழமை (19) நிறைவடைந்தது.
அப்போட்டியில் இங்கிலாந்து சகலதுறைகளிலும் பிரகாசித்து இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
அணித் தலைவர் ஹம்ஸா ஷெய்க், ரொக்கி ஃப்ளின்டோவ், ஜேட்ன் டென்லி ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் நாவ்யா ஷர்மா, பர்ஹான் அஹ்மத் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் இங்கிலாந்தின் வெற்றிக்கு அடிகோலின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி அதன் முதல் இன்னிங்ஸில் மோசமாகத் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இந்த மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேற்பட்ட 77 ஓட்டங்களை கயன வீரசிங்க பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியில் வேறு எவருமே 20 ஓட்டங்களை எட்டவில்லை.
இங்கிலாந்து பந்துவீச்சில் நாவ்யா ஷர்மா 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 477 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் ஹம்ஸா ஷெய்க் 107 ஓட்டங்களையும் ரொக்கி ஃப்ளின்டோவ் 106 ஓட்டங்களையும் ஜேட்ன் டென்லி 91 ஓட்டங்களையும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கேஷன பொன்சேகா 76 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக்க 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரவீன் மனீஷ 112 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு 324 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்த இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 9 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் மூவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
மஹித் பெரேரா 61 ஓட்டங்களையும் அணித் தலைவர் டினுர கலுபஹன 40 ஓட்டங்களையும் திசர எக்கநாயக்க 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பர்ஹான் அஹ்மத் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்த இலங்கை இளையோர் அணி, முதலாவது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் வெற்றபெற்ற போதிலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தொல்வியைத் தழுவி தொடரை 1 - 2 எனற பறிகொடுத்திருந்தது.
இப்போது டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடைந்த இலங்கை இளையோர் அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்ப உள்ளது.