மீண்டும் படகுப்பயணம்.. 68 அகதிகள் மீட்பு..!
21 ஆடி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2751
நேற்று ஜூலை 20 இரவு பல்வேறு படகுகள் பிரித்தானியா நோக்கி பயணித்ததாகவும், 68 அகதிகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Boulogne-sur-Mer கடற்பிராந்தியத்தில் இரு அகதிகளுடன் படகு ஒன்று பயணிப்பதை சர்வதேச கப்பல் ஒன்று பார்த்துவிட்டு CROSS அமைப்புக்கு (centre régional opérationnel de surveillance et de sauvetage) தகவல் தெரிவித்துள்ளது. அதையடுத்து குறித்த இருவர் மீட்கப்பட்டனர்.
இரண்டாவது மீட்புப்பணி Dunkerque நகரில் இடம்பெற்றது. சிறிய படகு ஒன்றில் 66 பேர் பயணித்த நிலையில், படகு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் கடலில் தத்தளிக்கும் போது அவர்களையும் CROSS அமைப்பினர் மீட்டனர்.
படகு ஒன்றில் 66 பேர் பயணிப்பது படகின் கொள்ளளவை விட மிக அதிகமாகும். அது தற்கொலை செய்வதற்கு சமமானது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்தில் இதேபோன்ற பயணங்களினால் மொத்தமாக 22 பேர் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.