ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலகும் ஜோ பைடன் ...?
21 ஆடி 2024 ஞாயிறு 04:43 | பார்வைகள் : 2454
அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து ஜோ பைடன் ஆலோசித்து வருகிறார்.
கூடிய விரைவில் அவர் போட்டியிலிருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று அக்கட்சி அதிகாரிகள் கருதுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்காமல் போகலாம் என்பதை அவர் ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.
81 வயது பைடன் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்த விவாதத்தில் மோசமாகத் தடுமாறியதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்துள்ளது.
பைடனின் வயது குறித்தும் அவர் நவம்பரில் வெற்றியடைவது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்க மக்களவை முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி சில கருத்துக்கணிப்புகளின் தகவல்களை பைடனுடன் பகிர்ந்துகொண்டதாக சி.என்.என். கூறியது.
பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வெற்றியடையும் சாத்தியம் குறைவு என்றும் கருத்துக்கணிப்புகளில் தெரிவதாக பெலோசி கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் தமது அக்கறைகளை வெளிப்படுத்தியதாக வொஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.