மத நிந்தனையும் சிறுபான்மையினரின் உரிமைகளும்
1 புரட்டாசி 2023 வெள்ளி 11:01 | பார்வைகள் : 3587
கிறிஸ்தவர் ஒருவர் குர்ஆனை இழிவுபடுத்தினார் என்று குற்றம்சாட்டி கிழக்கு பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் குழு ஒன்று அந்த நபரின் வீட்டை இடித்தும், தேவாலயங்களை எரித்தும் மேலும் பல வீடுகளை சேதப்படுத்தியும் வன்முறைகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்த வன்முறைகள் இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்த நிலையில், நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தையும் பாகிஸ்தான் அரசாங்கம் அப்பகுதிக்கு அனுப்பியிருந்தது.
பஞ்சாப் மாகாணத்தின், பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலாவில், உள்ளூர் கிறிஸ்தவரான ராஜா அமீர் என்பவரும் அவரது நண்பரும் குர்ஆன் பக்கங்களைக் கிழித்து தரையில் எறிந்து எழுதுவதைப் பார்த்ததாக அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கூறியதைத் தொடர்ந்து வன்முறைகள் வெடித்ததாக பொலிசார் கூறுகியிருந்தனர்.
இதன் பின்னர் அப்பகுதியில் பெரும் வன்முறைகளில் ஈடுப்பட்ட முஸ்லிம் குழுக்கள் பல தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகளைத் தாக்கத் தொடங்கின.
வன்முறை கும்பலிடம் இருந்து உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இறுதியில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாதுகாப்பு தரப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியின் முஸ்லிம்; மதகுருமார்கள் மற்றும் ஊர் பெரியவர்களின் உதவியுடன் அமைதிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், வன்முறைகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பாகிஸ்தானை பொறுத்த வரையில், மத நிந்தனை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வன்முறைகள் மற்றும் பிற மதத்தவர்கள் தாக்கப்படுவது சகஜமான விடயமாகியுள்ளது. பாக்கிஸ்தானின் மத நிந்தனைச் சட்டங்களின் கீழ், இஸ்லாம் அல்லது இஸ்லாமிய மதப் பிரமுகர்களை அவமதிக்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால் மத நிந்தனை குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க வாய்ப்பளிக்காதவாறு வன்முறைகள் இடம்பெற்று விடுகின்றன. எனவே தான் மரண தண்டனையை நிறைவேற்றவில்லை என்றாலும், பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் கலவரங்களை ஏற்படுத்தி, வன்முறை, படுகொலைகள் மற்றும் கொலைகளுக்கு காரணமாகி விடுகின்றன.
பாக்கிஸ்தானில் உள்ள மத சிறுபான்மையினரை பயமுறுத்துவதற்கும் தனிப்பட்ட பலிவாங்கல்களுக்கும் மத நிந்தனை குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படுவதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.
2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு விளையாட்டு உபகரணத் தொழிற்சாலையில் ஒரு முஸ்லிம் கும்பல், இலங்கையர் ஒருவரை மிகவும் வன்முறையாக செயல்பட்டு கொலை செய்திருந்தது. இந்த சம்பவம் சர்வதேச அரங்கில் பேசப்பட்டது.
எனினும், மத நிந்தனை குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய வகையில் விசாரணை செய்வதற்கு பாகிஸ்தாகில் சட்டங்கள் உள்ள போதிலும், வன்முறை கும்பல்கள் சட்டத்தை செயல்படுத்த இடமளிப்பதில்லை. மத நிந்தனை குறித்த அனைத்து சம்பவங்களிலுமே வன்முறை கும்பல்களின் சட்டத்தை மீறிய செயல்பாடுகளையே காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி