Paristamil Navigation Paristamil advert login

யாழில் கோவில் நகைகளை திருடிய குருக்கள் கைது

யாழில் கோவில் நகைகளை திருடிய குருக்கள் கைது

22 ஆடி 2024 திங்கள் 06:25 | பார்வைகள் : 1559


யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் திருடிய குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் என்பன காணாமல் போயிருந்தமை தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில் நகைகள் காணாமல் போயிருந்ததால் , போலி சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குறித்த ஆலயத் திருவிழாவின் போது உதவிக் குருக்களாக செயற்பட்ட 28 வயதுடைய குருக்கள் ஒருவராவார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவையும் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் சந்தேநபர் கைது செய்யப்பட்டு, கோயில் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதை, அப் பிரதேச மக்கள் வெடி வெடித்துத் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்