ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகும் ஜோ பைடன்
22 ஆடி 2024 திங்கள் 07:07 | பார்வைகள் : 1569
ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், டொனால்டு ட்ரம்புக்கு எதிராக தாம் களமிறங்கவில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கடந்த பல வாரங்களாக தேர்தல் தொடர்பில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளார் 81 வயதான ஜோ பைடன்.
அவரது உடல் நலம் மற்றும் டொனால்டு ட்ரம்புடனான முதல் நேரலை விவாதத்தில் சொதப்பியது என அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானது.
மட்டுமின்றி, ஜனநாயகக் கட்சியினரே அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளனர்.
ஆனால் போட்டியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றே இதுவரை ஜோ பைடன் வெளிப்படையாக கூறி வந்துள்ளார்.
கடந்த முறை டொனால்டு ட்ரம்பை தோற்கடித்தவர் என்பதால், இந்த முறையும் தம்மால் அவரை தோற்கடிக்க முடியும் என்றே ஜோ பைடன் கூறி வந்துள்ளார்.
தனிப்பட்ட முறையிலும் வெளிப்படையாகவும் பல்வேறு ஜனநாயக கட்சி தலைவர்கள் ஜோ பைடனுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நிலை உருவானது.
ஆனால் இறுதியான முடிவெடுக்க வேண்டியது ஜோ பைடன் மட்டுமே என்பதால் தலைவர்கள் பலர் பொறுமை காத்துள்ளனர்.
சுமார் 20 தலைவர்கள் வெளிப்படையாக ஜோ பைடனுக்கு எதிராக களமிறங்கினர்.
ஜோ பைடன் விலகுவதால், அவரது புகழுக்கு அது இழுக்கல்ல, மாறாக டொனால்டு ட்ரம்பை தோற்கடிக்க தங்களுக்கு அவர் அளிக்கும் வாய்ப்பு இது என்றும் பலர் விளக்கமளித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஜனநாயகக் கட்சியினரிடையே முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள், ஜோ பைடன் விலகி, வேறு ஒரு வேட்பாளரை கட்சி பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், திடீரென்று ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஜனாதிபதி வேட்பாளராக புதிய ஒருவர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக களமிறக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.