வினாத்தாள் கசிவு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்

22 ஆடி 2024 திங்கள் 08:17 | பார்வைகள் : 3635
தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, எதிர்க்கட்சியினர் கேள்விக்கு, ‛‛கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை'' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார்.
எதிர்க்கட்சியினர் கேள்வி
லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பினார்.
தேர்வு வினாத்தாள் கசிவில் மத்திய அரசு புதிய சாதனை படைத்துள்ளது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
நீட் தேர்வால் அனிதாவில் துவங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால், இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி. கலாநிதி கூறினார்.
மத்திய அமைச்சர் பதில்
இதற்கு மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. 7 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு இல்லை. முறைகேடு புகார் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 240 தேர்வுகளில், 5 கோடி மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுதியுள்ளனர். 2010ல் அப்போதைய அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அன்றைய தினம் நீட் தேர்வு கொண்டு வர ஆதரித்தவர்கள், இன்று அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர்.
4700 தேர்வு மையங்களில், பீஹார் மாநிலம் பாட்னாவில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் முறைகேடு நடந்ததாக, புகார் வந்தது. ஓரிரு இடங்களில் மட்டும் தான் நீட் தேர்வு முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பா.ஜ., அரசும் அதற்கு பொறுப்பேற்கும்.
நீட் தேர்வு விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை. ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமே இரண்டு முறை தெரிவித்துள்ளது. 2010ல் தேர்வு முறைகேடுகளை தடுப்பதற்கான மசோதாவை காங்கிரஸ் எதிர்த்தது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.