தமிழகத்தில் கள்ளுக்கடை:பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு
23 ஆடி 2024 செவ்வாய் 01:22 | பார்வைகள் : 1245
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து, அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 2003 முதல், 'டாஸ்மாக்' நிறுவனம் வாயிலாக மது விற்பனை நடக்கிறது. ஏகபோக உரிமை டாஸ்மாக் நிறுவனத்துக்கு உள்ளது; தனியாரை அனுமதிக்கவில்லை.
ஊழியர்களுக்கு சொற்ப தொகையே ஊதியமாக வழங்கப்படுவதால், சில்லரை விலைக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
கூடுதல் விலை
ஒவ்வொரு கடையிலும், 180 மில்லி பாட்டிலுக்கு 10 ரூபாய்; 180 மில்லிக்கும் அதிகமாக இருந்தால், 20 ரூபாய்க்கும் அதிகமாக என கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
இதனால், மொத்த விற்பனையில் 5 சதவீதம் வரை, அதாவது 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடக்கிறது. இந்தத் தொகை, விற்பனையாளர் முதல் துறை அமைச்சர் வரை பங்கிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபான தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வாங்க, லஞ்சம் நிர்ணயிக்கின்றனர். மது பிரியர்கள், தங்கள் விருப்பப்படியான மதுபானத்தை வாங்க முடியாது; மாறாக, கடைகளில் இருக்கும் மதுபானங்களை வாங்குவதற்கு தள்ளப்படுகின்றனர்.
சில ஆண்டுகளாக, டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், லாபத்தொகை திசை திருப்பப்படுகிறது என்று அர்த்தம்.
பெரும்பாலான மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், ஆளும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளன. இதனால், குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும், டாஸ்மாக் நிறுவனம் விற்கிறது.
உயிரிழப்பு
தரமற்ற மதுபானங்களால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. சுற்றுலாவை நம்பி இருக்கும் மாநிலங்களில், தரமான, பல ரகங்களில் மதுபானங்கள் கிடைக்க வேண்டும்.
தமிழகத்தின் அடையாளமாக பனை மரம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், 30 கோடி பனை மரங்கள் இருந்தன; தற்போது, 5 கோடி பனை மரங்களே உள்ளன. 1987 ஜனவரி 1ல், கள் விற்பனைக்கு தமிழக அரசு விதித்த தடை அமலுக்கு வந்தது.
தமிழக பாரம்பரியத்தில் கள் உள்ளது. இதில், 'ஆல்கஹால்' அளவு என்பது மிக குறைவு. மக்களின் வாழ்வாதாரமாக மட்டுமின்றி, சமூக நிகழ்வுகளில்பயன்படுத்தப்பட்டுள்ளது.
மதுபானங்களை விட, கள்ளில் ஆல்கஹால் அளவு மிகக்குறைவாக உள்ளது. ஆனால், மதுபானங்களை சட்டப்பூர்வமாக டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்கிறது. தமிழ்நாடு கள் இயக்கம் தடையை நீக்கும்படி வலியுறுத்தி வருகிறது. அரசு விதித்த தடையால், கள் இறக்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில், எந்த இடையூறும் இன்றி கள் விற்பனை நடக்கிறது. இதை, ஆரோக்கிய பானமாக கருதுகின்றனர். தமிழகத்தில் அரசு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யலாம். கள் விற்பனையை ஒழுங்குபடுத்தலாம். டாஸ்மாக் மதுபானங்களை விலை கொடுத்து வாங்க முடியாத ஏழைகள், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர். டாஸ்மாக் மதுபான விலையில் பாதி தான், கள்ளச்சாராயத்தின் விலையாக உள்ளது.
எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்து ரக மதுபானங்களும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். நியாய விலைக்கடைகளில், குறைந்த விலையில் மதுபானம் கிடைக்க வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் வெளியில், அதிக விலையில் மது விற்கவில்லை என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
கள் விற்பனைக்கு தடை விதித்து, 1986ம் ஆண்டிலும், டாஸ்மாக் கடைகள் வாயிலாக மதுபான விற்பனைக்கு அனுமதித்து, 2003ம் ஆண்டிலும் அமல்படுத்திய சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 'மதுபானங்களை சூப்பர் மார்க்கெட், நியாய விலைக் கடைகளில் விற்பது தொடர்பாக, அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதேநேரத்தில், மது விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்று, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
'கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதும், அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்றாலும், மதுபானங்களை வாங்க முடியாத ஏழை மக்களுக்காக, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து, அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது' எனவும், முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து, அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்ட முதல் பெஞ்ச், விசாரணையை, வரும் 29க்கு தள்ளி வைத்தது.
கள்ளுக்கு தடை ஏன்?
தமிழகத்தில் கள் இறக்கி விற்பதற்கும், கள் குடிப்பதற்கும், 1987 ஜனவரி 1 முதல் எம்.ஜி.ஆர்., அரசு தடை விதித்தது. 'கள்ளில் போதை குறைவு. கூடுதலான போதைக்காக, குளோரல் ஹைட்ரேட் எனும் வேதிப் பொருளை கலந்து விற்கின்றனர். இதை குடிப்பவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். கள் கலப்படத்தை, அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை' என, அப்போது அரசு காரணம் கூறியது.- நல்லசாமிஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு கள் இயக்கம்