பிரான்சின் தேசிய தினம் : அந்த 91 ஆண்டுகள்.

1 புரட்டாசி 2023 வெள்ளி 11:13 | பார்வைகள் : 5997
இன்னும் இரண்டு நாட்களில், இந்த பிரெஞ்சுதேசம் தனது தேசியநாளைக் கொண்டாட இருக்கிறது. கடந்த ஆண்டைவிட அதிகளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பல கட்டுப்பாடுகளுடன் இம்முறை ‘சோம்ப்ஸ் எலிஸே’ வீதி களைகட்டப் போகிறது.
பிரான்சின் தேசியநாளகிய ஜூலை 14 க்குப் பின்னால் இருக்கும் வரலாறு நீங்கள் அறிந்ததுதான். பரிசின் Bastille யில் இருந்த கோட்டையை புரட்சியாளார்கள் முற்றுகையிட்டுத் தகர்த்த நாள், இந்த நாள்.
சம்பவம் நடந்தது 1789 இல். அப்படியானால் இந்த ஆண்டில் ( 2023 ) கொண்டாடப்பட இருப்பது ‘234 வது தேசியநாள் தானே?’ என்கிறீர்களா..?
நீங்கள் சொல்வது சரிதான். நீங்கள் கணக்கில் புலிதான். 2023 இல் இருந்து 1789 ஐக் கழித்து 234 என்று கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்..!
ஆனால் வரலாறு வேறுவிதமாக இருக்கிறது. கோட்டை முற்றுகையிடப்பட்ட வரலாற்றுச் சம்பவம் நடந்தது என்னமோ 1789 ஜூலை 14 ஆக இருந்தாலும், இந்தநாளை தேசிய நாளாகக் கொண்டாடும் வழக்கம் அடுத்த ஆண்டே துவங்கிவிடவில்லை. அதற்கு பிரெஞ்சு மக்கள் 91 ஆண்டுகள் காத்திருக்கவேண்டி ஆயிற்று.
‘தேசிய நாள்’ என்று ஒருநாளை அறிவிப்பது அவ்வளவு இலகுவான விடயமா என்ன? சட்டம் இயற்ற வேண்டும், பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும், மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும்..! இல்லையா.?
இவற்றை எல்லாம் செய்து முடித்து, ஜூலை 14 ஐ தேசிய நாளாக அறிவிக்கப்பட்டது 1880 இல். அதாவது 91 ஆண்டுகள் கழித்து. அப்படியானால் அதுவரை கொண்டாட்டங்கள் எதுவும் நடக்கவில்லையா..?
நடந்ததன. மக்கள் கொண்டாடினார்கள். வீதியில் இறங்கி வெடி கொழுத்தினார்கள். ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என ஆடினார்கள்; பள்ளுப் பாடினார்கள். ஆனால் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது 1880 இல் தான்.
வேறு என்ன சுவையான சங்கதிகள் உண்டு என்கிறீர்களா? நாளை பார்க்கலாம்.