பரிசில் ஓர் அமெரிக்கத் திருடன்.
1 புரட்டாசி 2023 வெள்ளி 11:18 | பார்வைகள் : 3719
நாளை பிரான்சின் தேசியதினம். இந்த நாளைக் குறிக்கும் பல சொற்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ‘14 ஜூலை’ ( பிரெஞ்சில் 14 juillet ) ´ Fête nationale française’ ‘பிரெஞ்சுப் புரட்சி நாள்’ என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது.
இன்னொரு பெயரும் உண்டு. Bastille Day என்பதுதான் அது. ஆங்கிலத்தில் ‘பஸ்டில் டே’ என்போம். ஆனால் பிரெஞ்சில் ‘பஸ்தீய்’ என்றுதான் வரும். ‘ille’ எந்த நான்கு எழுத்துக்களையும் சேர்த்து ‘ய்’ என உச்சரிக்கிறார்கள். சரி சரி பிரெஞ்சுப் பாடத்தை இத்துடன் நிறுத்திக்கொண்டு, ஒரு சுவாரசியமான சம்பவத்தை வாசிப்போமா..?
இப்படியான ஒரு ‘பஸ்தீஸ் நாளில்’ அதாவது பிரான்சின் தேசிய தினத்தில், மக்கள் அனைவரும் கொண்டாட்டங்கள், களியாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்துவந்த ஒரு திருடன், பரிசிலே ஒரு பெண்ணின் கைப்பையை பறித்துக்கொண்டு ஓடுகிறான்.
அவள் வைத்திருந்த ஆடம்பர கைப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருக்கும். அதை வைத்து தன்னுடைய நாட்களை ஓட்டிவிடலாம் என அந்தத் திருடன் கணக்குப் போட்டான். ஆனால் உள்ளே இருப்பது ஆபத்தான வெடிமருந்து என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பணத்தை எடுத்துவிட்டு கைப்பையை எறிந்துவிடுகிறான். அது வெடித்துச் சிதறி நான்குபேரின் உயிரை பறித்துவிடுகிறது. அமெரிக்கத் திருடனின் கையில் குறித்த பை இருந்ததை CCTV மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்துவிட, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை துரித கதியில் முடுக்கிவிட்டனர்.
கைப்பையில் வெடிமருந்தை வைத்திருந்த அந்தப் பெண் யார்? அவளின் நோக்கம் என்ன? காவல்துறையிடம் பிடிபட்ட அமெரிக்கத் திருடனின் கதி என்னவவாயிற்று..? போன்றவற்றை வெண்திரையில் காண்க..!
எது வெண்திரையா..? அப்படியானால் இது சினிமா படக்கதையா.?
ஆம் சினிமாவே தான். படத்தின் பெயர் Bastille Day. 2016 இல் வெளியானது. 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாகி, 15 மில்லியன் டொலர்களை வசூலித்தது.
பிரான்சின் தேசியநாளை மையமாக வைத்து, அந்தக் காட்சிகளை உள்ளடக்கி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதனால்தான் Bastille Day என்ற பெயரையும் பெற்றது.
தேசியநாள் கொண்டாட்டங்களை அகன்ற திரையில் காட்டியமைக்காக இத்திரைப்படம் பிரெஞ்சு மக்களின் விருப்பத்துக்குரிய ஒரு படம் என தகவல்கள் சொல்கின்றன.