9 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
23 ஆடி 2024 செவ்வாய் 15:22 | பார்வைகள் : 1302
பார்லிமென்டில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், 9 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''இந்த பட்ஜெட், 'வேளாண் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு, தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை, நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல் மேம்பாடு, உள்கட்டமைப்பு, புதுமை ஆராய்ச்சி, சீர்திருத்தங்கள்' ஆகிய 9 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன், கல்வியை வழங்க ரூ.1.48 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் துவங்கப்படும்.
* நாடு முழுவதும் இளைஞர்கள் 4 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* 4.1 கோடி இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
* அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்.
வேளாண் ஆய்வு மையங்கள்
* நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எம்.எஸ்.பி உறுதி செய்யப்பட்டது.
* அடக்கவிலையை காட்டிலும் எம்எஸ்பி 20 சதவீதம் அதிகம் இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
* நாடு முழுவதும் 10 ஆயிரம் இயற்கை வேளாண் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
* இந்தியாவில் வேளாண் உற்பத்தியை பெருக்க புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
புதிய வகை பயிர்கள் அறிமுகம்
* காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத புதிய 102 வகை பயிர்களை அறிமுகம் செய்ய திட்டம்.
* விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேளாண் துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
* நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
வேலைவாய்ப்பு
* வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.
* உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* 20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் ஆயிரம் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.
வட்டி ரத்து
* நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும்.
* மாணவர்களை ஊக்குவிக்க உயர்க்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.
* பீஹார் மாநிலத்தில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
* ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்பு திட்டம் வகுக்கப்படும்.
* ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
* அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சி
* அமிர்தசரஸ் - கயா இடையே புதிதாக பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
* பீஹார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களை மேம்படுத்தி சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.
* 400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யப்படும்.
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஓதுக்கீடு
* ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.