பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி
24 ஆடி 2024 புதன் 08:03 | பார்வைகள் : 1599
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டினார். அதனை மறுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛‛ பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டவில்லை'' என பதிலடி கொடுத்தார்.
வெளிநடப்பு
ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும் போது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார். பிறகு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாய்ப்பு கிடைப்பதில்லை
அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை. எந்த பாரபட்சமும் காட்டவில்லை. எனது பதிலுரையை கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். முந்தைய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடப்பட்டதா? பட்ஜெட் உரையில் எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றால், அது புறக்கணிப்பு ஆகாது.
பலன்
இடைக்கால பட்ஜெட், பொது பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவின் பெயர் குறிப்பிடவில்லை. அங்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்.
திட்டமிட்டு
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. மக்களை தவறாக வழிநடத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. மேற்கு வங்கத்தில், நிதி அளித்தும் மத்திய அரசின் திட்டங்களை அம்மாநில அரசு அமல்படுத்தவில்லை. பிரதமரின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.