நிலுவையில் மசோதாக்கள்: மேற்கு வங்கம், கேரள கவர்னர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
26 ஆடி 2024 வெள்ளி 08:16 | பார்வைகள் : 1233
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்கும்படி கேரள, மேற்கு வங்க கவர்னர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்க சட்டசபையில் 8 மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்கு மேலாக அவற்றை கவர்னர் நிலுவையில் வைத்து உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.
அதேபோல், கேரள கவர்னரும் 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசுகளின் மனு குறித்து பதிலளிக்கும்படி கேரள கவர்னர் அலுவலகத்திற்கும், மேற்கு வங்க கவர்னர் அலுவலகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.