Ghost Wedding முறை- உயிரிழந்த காதலனை திருமணம் செய்யப்போகும் காதலி
27 ஆடி 2024 சனி 08:38 | பார்வைகள் : 668
பழமையான முறையான கோஸ்ட் வெட்டிங் முறையில் விபத்தில் இழந்த காதலனை திருமணம் செய்து கொள்ள காதலி முடிவு செய்துள்ளார்.
கோஸ்ட் வெட்டிங் (Ghost Wedding) முறை என்பது சீன நாட்டின் முன்னூறு ஆண்டுகள் பழமையான முறையாகும். திருமணம் செய்துகொள்ளாமல் உயிரிழந்தவர்கள் மற்றும் நிச்சயமான பின்னர் இறந்தவர்கள் ஆகியோர் இறந்த பின்னர் தனக்கு யாருமில்லை என்று வேதனையடைவதாக நம்பப்படுகிறது.
இதனால் உயிரிழந்த நபரை நேசிப்பவர்கள் தங்களுடைய சொந்தம் முன்னிலையில் அவரை திருமணம் செய்து கொள்ளும் முறை தான் பேய் திருமணம் (Ghost Wedding).
அப்போது உயிரிழந்த நபருடைய புகைப்படம், உடை, பொருட்களை வைத்து திருமணத்தை கோலாகலமாக நடத்துவார்கள்.
இந்நிலையில், தைவான் நாட்டில் காதலி ஒருவர் தன்னுடைய உயிரிழந்த காதலனை கோஸ்ட் வெட்டிங் முறையில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
தைவான் நாட்டை சேர்ந்த இளம்பெண் யூ. இவர் ஜூலை 15 -ம் திகதி தனது காதலர் மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென கார் விபத்துக்குள்ளானதால் உள்ளே இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், யூவின் காதலன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக யூ கூறுகையில், "இந்த கோர சம்பவம் இன்னும் எனது கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. விபத்தில் எனது காதலன், அவரது சகோதரி, எங்களது நண்பர் மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர்.
என் காலில் பலத்த காயம் ஏற்பட்ட போதும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தேன். கடைசியில் எனது காதலனை பறிகொடுத்துவிட்டேன்.
என்னுடைய உண்மையான காதலை கவுரவப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். காதலனின் தாயை கவனித்துக் கொள்ளவும், என் வாழ்க்கையை அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.