அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
27 ஆடி 2024 சனி 09:07 | பார்வைகள் : 1875
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த விடயத்தை கமலா ஹாரிஸ் சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தொடர்பான விண்ணப்பங்களில் கையொப்பமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் கையெழுத்திடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
நவம்பரில் தனது அடிமட்ட பிரச்சாரம் வெற்றி பெறும் என கமலா ஹாரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெற்றி பெற ஒவ்வொரு ஓட்டுக்காகவும் கடுமையாக உழைப்பேன் என்று கூறினார்.
இதற்கிடையில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் சமீபத்தில் தேர்தலில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே. இந்தப் பின்னணியில் கமலா ஹாரிஸ் பெயர் அடிபட்டது. உடனடியாக அவருக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தம்பதிகளும் ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். அமெரிக்காவின் அற்புதமான அதிபராக வருவார் என்று ஒபாமா பாராட்டினார்.
அவர் இந்த பதவிக்கு தகுதியானவர் என்றும், நவம்பர் தேர்தலில் டிரம்பை தோற்கடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் கூறினார்.
மறுபுறம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.