மூன்றாம் உலகப் போர் உறுதி - நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
27 ஆடி 2024 சனி 09:11 | பார்வைகள் : 2260
நவம்பரில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வி என்பது மூன்றாம் உலகப் போரை உருவாக்கிவிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
புளோரிடா மாகாணத்தில் பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டொனால்டு ட்ரம்பின் Mar-a-Lago விடுதியில் வைத்து பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பை டொனால்டு ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.
இருவரும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொண்டதாகவே கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் Mar-a-Lago விடுதிக்கு வந்த நெதன்யாகு மற்றும் சாரா தம்பதியை வாசல் வரை வந்து வரவேற்றுள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
இந்த சந்திப்புக்கு பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வி என்பது மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மாறாக தாம் வென்றால், மிக விரைவாகவே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு இப்போது நாம் மூன்றாம் உலகப் போரை நெருங்கிவிட்டோம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், நீங்கள் ஒருபோதும் இப்படியான நெருக்கடியை எதிர்கொண்டதில்லை, ஏனென்றால் திறமையற்றவர்கள் நம் நாட்டை நடத்துகிறார்கள் என்றார்.
ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் என அறிவித்திருந்த பெஞ்சமின் நெதன்யாகு, தற்போது பாலஸ்தீன மக்கள் 39,000 பேர்களுக்கும் அதிகமானோரை கொன்றதன் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்கும் மட்டும் இந்த போர் தொடரும் என்றார்.
அத்துடன் காஸாவில் தற்போதும் 115 பணயக்கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் கண்டிப்பாக காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், உடனடியாக முடித்துக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.