மத்திய திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை: அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
29 ஆடி 2024 திங்கள் 02:43 | பார்வைகள் : 944
தமிழகத்துக்கு, மத்திய அரசு பல திட்டங்களை வழங்கிய போதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது,” என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.
கோவையில், அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பேட்டி:
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயிகள் நலன், மகளிர் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என, ஒன்பது முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதால், அது சார்ந்த தொழில் மேம்படும். பட்ஜெட்டில், சிறு, குறு தொழில்கள் நிறைந்த கோவை போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், 'பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை; தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது' என கூறுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் துறையினர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு மத்திய அரசு பல திட்டங்களை வழங்கியபோதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொய் குற்றச்சாட்டு
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்ற, எட்டு மாத காலத்திற்கு பின் உத்தரவிடுகிறது. இத்தகைய பொறுப்பற்ற செயலால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது, அரசியல் சார்ந்த கருத்து. தமிழகம் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை.சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு மட்டுமே 100 சதவீத நிதி ஒதுக்க வேண்டும் என்பது போல பொய்யான குற்றச்சாட்டை, தமிழக முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.