ரூ.5,577 கோடி கோவில் நிலம் மீட்பு: அறிக்கை வெளியிட்டு அரசு பெருமிதம்
29 ஆடி 2024 திங்கள் 02:47 | பார்வைகள் : 1084
மூன்று ஆண்டுகளில், ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, 5,577 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,140 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கை:
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைய துறையின் பணிகளை பார்த்து பொதுமக்கள் பிரமிக்கின்றனர். மூன்று ஆண்டுகளில், 1,355 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. மேலும், 8,436 கோவில்களில், 3,776 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில், ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளில் உள்ள, 1,250 கோவில்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய்; கோவில்களில் உள்ள 143 குளங்களை சீரமைக்க, 84 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
மூன்று கோவில்களில் புதிதாக, 2.71 கோடி ரூபாய் செலவில் குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சமயபுரம், திருவெண்ணெய்நல்லுார், திருபாற்கடல், தாராபுரம், அரியலுார் மற்றும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆறு கோவில்களில், 8 கோடி ரூபாயில், ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.
மேலும், ஆறு கோவில்களுக்கு, 28.7 கோடி ரூபாயில், ராஜகோபுரங்கள் கட்டும் பணி நடக்கிறது. புதிதாக, 15 கோவில்களில், 25.9 கோடி ரூபாயில் ராஜகோபுரங்கள் கட்டப்பட உள்ளன.
நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம், எட்டு கோவில்களில் நடந்து வருகிறது. நடப்பாண்டு மேலும், மூன்று கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அன்னதான திட்டம், 756 கோவில்களில் நடந்து வருகிறது; நாள்தோறும், 82,000 பேர் பயன்பெற்று வருகின்றனர். மூன்று ஆண்டுகளில், ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான, 5,577 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,140 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், 73 கோவில்களில், 257 கோடி ரூபாயில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு உள்ளன. பக்தர்கள் வசதிக்காக 17 தங்கும் விடுதிகள் கட்டும் பணி, 70.5 கோடி ரூபாயில் நடந்து வருகிறது.
அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 83.6 கோடி ரூபாயில், 48 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கோவில்களில் உள்ள 123 பசு மடங்கள், 20.6 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆறு கோவில்களுக்கு சொந்தமான நகைகள் உருக்கப்பட்டு, 344 கிலோ தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு, 191 கோடி ரூபாய் மதிப்பில், வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு கால பூஜை திட்டத்தில், தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 2,000 கோவில்களுக்கு அரசு மானியமாக, 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் ஹிந்து அறநிலைய துறையையும், அரசையும், முதல்வரையும் பக்தர்கள், பொதுமக்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.