ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் உள்துறை அமைச்சர்!!
29 ஆடி 2024 திங்கள் 15:16 | பார்வைகள் : 4637
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு வெகு சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் மிகுந்த திட்டமிடல்களுடனும் இடம்பெற்றிருந்தது. இருந்த போதும் அதன் மீதான விமர்சனங்களுக்கும் குறைவில்லை. குறிப்பாக கிரேக்க கடவுள் மற்றும் யேசுநாதரின் இரவு உணவு போன்ற நிகழ்வுகளின் பிரதியை ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இயேசுநாதரை பருமனான பெண் ஒருவராக காட்சிப்படுத்தப்பட்டதும், ஓரினச்சேர்க்கையாளர்களை ஏனைய கதாப்பாத்திரங்களாக காட்சிப்படுத்தியிருந்தமையும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகங்கள் பெரும் விமர்சனத்தை முன் வைத்திருந்தது.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பிரெஞ்சு உள்துறை அமைச்சர் Gérald Darmanin பதிலளித்துள்ளார்.
‘பிரான்ஸ் நிறைந்த சுதந்திரம் கொண்டது. இங்கு பாலியல் சுதந்திரம் உள்ளது. மத சுதந்திரம் உள்ளது. கேலி கிண்டல்கள், கேலிச்சித்திரங்களுக்கான சுதந்திரமும் கொண்டது!” என தெரிவித்தார்.
’எனக்கு சில ஓவியங்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் அது படைப்பாளியின் சுதந்திரம். அதனை தடுக்க முடியாது. அப்படி தடுக்க முடிந்தால் நான் பிரெஞ்சுக்காரனே இல்லை!’ எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.