Paristamil Navigation Paristamil advert login

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

30 ஆடி 2024 செவ்வாய் 02:49 | பார்வைகள் : 972


குழந்தை பிறந்தது முதல், 10 வயது வரை செலுத்தப்பட வேண்டிய, 11 வகையான தடுப்பூசிகளை, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி, 11 வகையான தடுப்பூசிகள், குழந்தைகளுக்கு இலவசமாக போடப்படுகின்றன.

இத்தடுப்பூசிகள், காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு ஆகிய, 12 பாதிப்புகளுக்கு போடப்படுகின்றன.

இத்தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வாரந்தோறும் புதன்கிழமையன்று இலவசமாக போடப்படுகின்றன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பெறப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, தனியார் மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மக்கள் நல்வாழ்வு துறை திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தடுப்பூசிகளை, தனியார் மருத்துவ மனைகளிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகள் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் கண்டறிந்து, அவர்களிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, எவ்வித கட்டணமும் பெறாமல், இலவசமாக தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உத்தரவாதம் அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்