வேலுார், நெய்வேலிக்கு விமான நிலையம் !!
30 ஆடி 2024 செவ்வாய் 02:51 | பார்வைகள் : 806
உள்நாட்டு விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழகத்தின் வேலுார், நெய்வேலி உட்பட எட்டு மாநிலங்களில், 12 புதிய விமான நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது.
சாமானிய மக்கள் விமான போக்குவரத்து சேவையை பயன்படுத்தவும், உள்நாட்டு விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், 'உதான்' திட்டம் 2016ல் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சிறு நகரங்களில் ஏர்போர்ட் அமைத்தல், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஏர்போர்ட்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, உதான் திட்டத்தின் கீழ் 13 ஹெலிபோர்ட், இரண்டு நீர்வழி ஏரோடிரோம்கள் உட்பட, 85 விமான நிலையங்கள், 579 வழித்தடத்தை இணைக்கின்றன. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் நேற்று (ஜூலை 29) ராஜ்யசபாவில் கூறியதாவது:
உதான் திட்டத்தின் கீழ், 12 விமான நிலையங்கள் இந்த ஆண்டு திறக்கப்பட உள்ளன. அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் கார் நிக்கோபாரில் உள்ள ஷிப்புர், சத்தீஸ்கரின் அம்பிகாபுர், மத்திய பிரதேசத்தின் ரேவா மற்றும் டாடியா, மஹாராஷ்டிராவின் அமராவதி, சோலாபூர், டாமன் - டையூவின் டாமன், ஹரியானாவின் அம்பாலா, உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மற்றும் சஹாரன்புர், தமிழகத்தின் வேலுார் மற்றும் நெய்வேலி உள்ளிட்ட 12 இடங்களில் இந்த விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.
நாடு முழுதும் உள்ள செயல்படாத மற்றும் குறைந்த சேவை அளிக்கும் விமான நிலையங்களுக்கு புத்துயிர் அளித்து மேம்படுத்த, முதல்கட்டமாக 4,500 கோடியும், இரண்டாம் கட்டமாக 1,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.