அடுத்த ஆண்டு முதல் டெஸ்லாவில் மனித ரோபோக்கள்: எலான் மஸ்க் தகவல்
30 ஆடி 2024 செவ்வாய் 09:52 | பார்வைகள் : 1271
அடுத்த ஆண்டு முதல் மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், அடுத்த ஆண்டு முதல் ஆப்டிமஸ்(Optimus) எனப்படும் மனித ரோபோக்களை நிறுவனத்தின் உள் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தத் தொடங்குவோம் என்று அறிவித்துள்ளார்.
இது ரோபோட்டிக்ஸ் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்டிமஸ் திட்டம் மூலம் டெஸ்லா தொழிற்சாலையில் மனிதனைப் போன்ற ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது.
ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் தொழிற்சாலைகளில் உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு தொழில்களில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என நம்பப்படுகிறது.
இந்த ரோபோக்கள் 2025 ஆம் ஆண்டு குறைந்த அளவில் உற்பத்தி செய்து டெஸ்லாவுக்குள் முதலில் பயன்படுத்தப்படும் என்றும், பின்னர் 2026 ஆம் ஆண்டு அதிக அளவில் உற்பத்தி செய்து வெளிப்புற வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதன் இறுதி இலக்கானது ஆபத்தான, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய மற்றும் சலிப்பான பணிகளை செய்யக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்குவதாகும்.