லெபனான் தலைநகரின் விமான சேவையை நிறுத்திய சுவிட்சர்லாந்து
30 ஆடி 2024 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 1988
லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான சேவையை சுவிட்சர்லாந்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காசாவிலுள்ள ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேல் படைகளுக்குமிடையே தொடர்ந்து தாக்குதல் இடம்பெற்று வருகின்றது.
காசாவுக்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகிறது.
சனிக்கிழமையன்று, இஸ்ரேல் கைவசமிருக்கும் கோலன் குன்றுகளில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதலில் 12 பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்கள். அந்த தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்க இருப்பதாக இஸ்ரேல் சூழுரைத்துள்ளதால், அங்கு பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவேதான், லுப்தான்சா மற்றும் அதன் உப நிறுவனங்களான SWISS மற்றும் Eurowings ஆகிய அனைத்து விமான நிறுவனங்களும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான சேவையை ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை ரத்து செய்துள்ளன.