RATP பாதுகாப்பு பெட்டக அறைக்குள் இருந்த €60,000 யூரோக்கள்..!
30 ஆடி 2024 செவ்வாய் 18:35 | பார்வைகள் : 4697
போக்குவரத்து சேவைகளை வழங்கிவரும் RATP நிறுவனத்துக்குச் சொந்தமான பாதுகாப்பு பெட்டக அறை ஒன்றுக்குள் இருந்து €60,000 யூரோக்கள் பணம் மீட்கப்பட்டுள்ளது.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் rue Le Brun வீதியில் உள்ள RATP நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து தரிப்பிடத்தில் இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தரிப்பிடத்தில் உள்ள ஓய்வு அறை மற்றும் பாதுகாப்பு பெட்டகம் உள்ள அறைக்கு அதன் மேலாளர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். வழக்கமான சோதனை நடவடிக்கை தான் அது. ஆனால் இம்முறை அங்கு பேருந்து சாரதி ஒருவரின் சந்தேகத்துக்கிடமான சீருடை ஒன்று இருந்துள்ளது. அதனை திறந்து பார்வையிட்டபோது, சீருடைக்குள் பெரும் தொகை பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக மேலாளர் காவல்துறையினரை அழைத்தார். விரைந்து வந்த அவர்கள், குறித்த ரொக்கப்பணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். அதில் 50 - 100 யூரோ தாள்களாக மொத்தம் €60,000 யூரோக்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.