Paristamil Navigation Paristamil advert login

தேசிய அரசியலில் மாற்றம்: சோனியா கணிப்பு

தேசிய அரசியலில் மாற்றம்: சோனியா கணிப்பு

31 ஆடி 2024 புதன் 08:06 | பார்வைகள் : 706


விரைவில் நடக்கும் நான்கு மாநில சட்டசபை தேர்தலின் போது, லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டால் தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கூறியுள்ளார்.

உயிரிழப்பு

டில்லியில் காங்கிரஸ் பார்லி., குழு கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவரும், பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா பேசியதாவது: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு, நமது தொண்டர்கள், உதவுகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எங்களது இரங்கலை தெரிவிக்கிறோம். இயற்கை பேரிடரை தவிர்த்து, தவறான நிர்வாகம் காரணமாக ஏற்படும் ரயில் விபத்துகளிலும் நமது மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

ஏமாற்றம்

மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை. பட்ஜெட்டை பெரிய சாதனை என பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினாலும், பெரிய ஏமாற்றம் நிலவுகிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

தற்காலிக தீர்வு

லோக்சபா தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மோடி அரசு சரியான பாடம் கற்கும் என நினைதோம். ஆனால், மாறாக, சமூகங்களை பிரித்து அச்சம் மற்றும் விரோத போக்கு கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.அதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டது. இது தற்காலிக தீர்வு தான்.

பாதிப்பு

கடந்த ஆண்டுகளில் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பதிலாக, ஒட்டு மொத்த கல்விமுறையும் குறைபாடுள்ளதாக கையாளப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் நடந்த மோசடிகள் அம்பலமாகி இளைஞர்களின் நம்பிக்கையை அழித்து அவர்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளது. தன்னாட்சி பெற்ற அமைப்பான என்சிஇஆர்டி, யுஜிசி மற்றும் அரசியல்சாசன அமைப்பான யுபிஎஸ்சி போன்றவை அழிக்கப்பட்டு விட்டது.

கேலிக்கூத்து

தேச பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் செய்திகள் வெளியாகிறது. ஜம்முவில் மட்டும் கடந்த சில வாரங்களில் 11 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது, காஷ்மீர் குறித்து மோடி அரசு சொல்லும் தகவல்களை கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி உள்ளது. மணிப்பூர் மாநிலத்திலும் சூழ்நிலை மேம்படவில்லை. உலகின் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று, இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த மறுக்கிறார்.

அதீத நம்பிக்கை கூடாது

இன்னும் சில மாதங்களில் நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் நமக்காக ஏற்படுத்தப்பட்ட வேகத்தையும் , நல்லெண்ணத்தையும் தக்க வைக்க வேண்டும். நாம் மன நிறைவுடனும், அதீத நம்பிக்கையுடனும் இருக்கக் கூடாது. சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால், நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்